ஓ இயாங் சூ 
ஹாலிவுட்

பாலியல் புகாரில் சிக்கிய ‘ஸ்குவிட் கேம்’ நடிகரிடம் மீண்டும் விசாரணை

செய்திப்பிரிவு

சியோல்: பாலியல் புகாரில் இருந்து பிரபல ‘ஸ்குவிட் கேம்’ தொடர் நடிகர் ஓ இயாங் சூ (O Yeong-Su) விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொரிய தொடர் ‘ஸ்குவிட் கேம்’, நெட்பிளிக்ஸில் வெளியாகி மிகவும் பிரபலமானது. கடன் தொல்லையில் சிக்கியவர்களுக்காக ஒரு விளையாட்டு நடத்தப்படும். அதில் பங்கேற்பவர்கள் வெற்றி பெற்றால் பெருந்தொகை கிடைக்கும். தோல்வி அடைந்தால் கொல்லப்படுவார்கள். இந்த கதை களத்தை கொண்டு முதல் சீசன் தொடர் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது. இந்தத் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தென் கொரியாவைச் சேர்ந்த 78 வயது நடிகர் ஓ இயாங் சூ. தென் கொரிய நடிகர்களில் முதல் முதலாக சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருதும் இவருக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு இளம்பெண் ஒருவரிடம் தகாத முறையில் தொட்டதாக ஓ இயாங் சூ மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் ஓ இயாங் சூ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தவறு என்று விடுவிக்கப்பட்டார். அத்துடன் விசாரணையும் முடித்து வைக்கப்பட்டது.

ஆனால், சம்பந்தப்பட்ட பெண் மீண்டும் 2021 டிசம்பர் மாதம் ஓ இயாங் சூ மீது பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரும் கடந்த 2022 ஏப்ரல் மாதம் முடித்து வைக்கப்பட்டது. ஆனால், மீ்ண்டும் அந்த இளம்பெண் புகார் அளித்துள்ளதால் ஓ இயாங் சூ மீது விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

இதற்கிடையில், தன் மீதான புகாரை நடிகர் ஓ இயாங் சூ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

SCROLL FOR NEXT