இந்திய பான் மசாலா விளம்பரத்தில் தாம் இடம்பெற்றது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக ஹாலிவுட் நடிகரும், ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவருமான பியர்ஸ் பிராஸ்னன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகைக்கு பியர்ஸ் பிராஸ்னன் அளித்த பேட்டியில் கூறியதாவது, "புற்றுநோய் ஏற்படுத்தும் பான் மசாலா விளம்பரத்தில் நான் நடித்திருப்பது என்னை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நான் இந்திய மக்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். என்னை இந்த விளம்பரத்தில் சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும், பற்களை பளப்பளப்பாக்கும் என்று கூறிதான் நடிக்க வைத்தனர். ஆனால் நான் நடித்த பான் மசாலா விளம்பரம் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது என்று அறிந்ததும் மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன்.
புற்றுநோயால் நான் எனது சொந்த வாழ்க்கையில் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறேன். எனது முதல் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் என பலரை புற்றுநோய்க்கு பறிகொடுத்துள்ளேன்.
தொடர்ந்து நான் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பெண்கள் வளர்ச்சி உள்ளிட்டவைகளுக்கு குரல் கொடுத்து வருகிறேன்.
எனது புகைப்படத்தை பான் மசாலா விளம்பரத்திலிருந்து நீக்குமாறு சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். பான் மசாலா விளம்பரத்தில் நடித்தற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
முன்னதாக ஒரு நிறுவனத்தின் பான் மசாலா டப்பாவை பிராஸ்னன் கையில் பிடித்தபடி காட்சி தரும் விளம்பரம் இந்தியாவின் தேசிய நாளேடுகள் சிலவற்றில் முதல் பக்கத்தில் வெளியானது. அதில் பான் மசாலாவை விளம்பரப் படுத்தும் வார்த்தைகளுடன் பிராஸ்னன் கையொப்பமும் காணப்பட்டது.
மேலும் டி.வி. சேனல்களில் இந்த விளம்பரம் வெளியானது. அத்துடன் பிராஸ்னன் விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரல் ஆக பரவியது. கூடவே இதற்கு எதிரான விமர்சனங்களும் ஏற்பட்டன.
'கோல்டன் ஐ', 'டுமாரோ நெவர் டைஸ்', ' தி வேர்ல்ட் இஸ் நாட் எனாஃப்', 'டை அனதர் டே' உள்ளிட்ட படங்களில் 'ஜேம்ஸ்பாண்ட் 007' கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் பியர்ஸ் பிராஸ்னன் என்பது குறிப்பிடத்தக்கது.