ஹாலிவுட்

‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2’-ல் டெட்பூல் கேமியோ இல்லவே இல்லை - சத்தியம் செய்த ரையான் ரெனால்ட்ஸ்

செய்திப்பிரிவு

‘நான் சத்தியம் செய்கிறேன். டெட்பூல் கதாபாத்திரம் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2’ படத்தில் இடம்பெறாது’ என்று நடிகர் ரையான் ரெனால்ட்ஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்

மார்வெல் காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் ‘டெட்பூல்’. இதனை அடிப்படையாகக் கொண்டு டெட்பூல் 1 மற்றும் 2 ஆகிய திரைப்படங்களில் 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் தயாரித்தது. இவ்விரண்டு படங்களும் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தற்போது இதன் மூன்றாம் பாகத்துக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

டெட்பூல், எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் 4 உள்ளிட்ட சில மார்வெல் கதாபாத்திரங்களில் உரிமை 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வந்தது. சமீபத்தில் 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தை டிஸ்னி நிறுவனம் வாங்கி விட்டதால், ஏற்கெனவே டிஸ்னி கட்டுப்பாட்டில் இருக்கும் மார்வெல் நிறுவனம் நேரடியாக தயாரிக்கும் படங்களில் இனி மேற்குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் இடம்பெறும்.

அந்த வகையில் வரும் மே மாதம் வெளியகவுள்ள ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2’ படத்தில் டெட்பூல் கதாபாத்திரத்தின் கேமியோ இடம்பெறவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்வில் பங்கேற்ற ‘டெட்பூல்’ நடிகர் ரையான் ரெனால்ட்ஸ் இத்தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் ‘நான் சத்தியம் செய்கிறேன். டெட்பூல் கதாபாத்திரம் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2’ படத்தில் இடம்பெறாது’ என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ படத்தின் வெளியீட்டுக்கு முன்னர் இது போன்ற தகவல்கள் ஏராளமாக பரவி வந்தன. ஆனால் அப்போதும் இதே போல மார்வெல் நிறுவனம் வாய் திறக்காமல் மௌனம் காத்து வந்தது. நடிகர்களும் அத்தகவல்களை மறுத்து வந்தனர். ஆனால் படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அத்தகவல்களை உண்மைப்படுத்தும் விதமாக காட்சிப்படுத்தியிருந்தது மார்வெல். அதே போல ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2’ படத்திலும் நடக்கலாம் என்று மார்வெல் ரசிகர்கள் கருதுகின்றனர்.

நகைச்சுவை வசனங்கள், மற்றும் சுயபகடி ஆகியவற்றுக்கு பேர் போன டெட்பூல் கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT