அடுத்த ஜேம்ஸ் பாண்ட் குறித்த ஊகங்களுக்கு ஹென்றி கெவில் விளக்கமளித்துள்ளார்.
ஜேம்ஸ் பாண்ட் திரை வரிசையில் 25-வது படம் 'நோ டைம் டு டை'. இந்தப் படத்தில் டேனியல் க்ரெய்க் ஐந்தாவது முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமே ஜேம்ஸ் பாண்டாக அவர் நடிக்கும் கடைசிப் படமாகும். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இந்தப் படம் கரோனா நெருக்கடியால் தொடர்ந்து பலமுறை தள்ளிப்போய், ஒருவழியாக கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. கேரி ஜோஜி ஃபுகுநாகா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ரமி மாலெக் வில்லனாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் என்ற கேள்வி ஹாலிவுட் ரசிகர்களிடையே எழுந்தது. இத்ரிஸ் எல்பா, டேனியல் கலூயா, ரிச்சர்ட் மேடன், டாம் ஹார்டி எனப் பல நடிகர்களின் பெயர்கள் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஆக இருக்கலாம் என்ற ஊகப் பட்டியலில் இடம்பிடித்தன.
அதிலும் டிசி காமிக்ஸ் படங்களில் சூப்பர்மேனாக நடித்து வரும் ஹென்றி கெவிலின் பெயரைத் தொடர்ந்து ரசிகர்கள் ஊகித்து வருகின்றனர். இந்த ஊகங்களுக்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹென்றி கெவில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''இதற்கு காலம் பதில் சொல்லும். ஒருவேளை தயாரிப்பாளர் என்னை விடக் குறைந்த வயதுடைய நடிகரைக் கூடப் பரிசீலிக்கலாம். இந்தக் கட்டத்தில் எதுவும் கூறமுடியாது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். ஆனால், ஜேம்ஸ் பாண்ட் ஆக நடிக்கவே நான் விரும்புகிறேன். அது மிக மிக மகிழ்ச்சியான ஒரு விஷயம்''.
இவ்வாறு ஹென்றி கெவில் கூறியுள்ளார்.