நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'டோண்ட் லுக் அப்' திரைப்படத்துக்கு நடிகர் லியார்னடோ டிகாப்ரியோ பெறும் சம்பளம் பற்றி ஹாலிவுட் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆடம் மெக்கே இயக்கத்தில், நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் நகைச்சுவைப் படம் 'டோண்ட் லுக் அப்'. இரண்டு அடிமட்ட விண்வெளி வீரர்கள், பூமியைத் தாக்க வரும் மிகப்பெரிய எரிகல் ஒன்றைப் பற்றி எச்சரிக்கை செய்ய அமெரிக்காவைச் சுற்றிப் பயணிக்கின்றனர் என்பதே இதன் கதை.
இதில் நாயகனாக லியார்னடோ டிகாப்ரியோவும், நாயகியாக ஜெனிஃபர் லாரன்ஸும் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக இருவரது சம்பளம் மட்டுமே கிடத்தட்ட 55 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் லியார்னடோ டிகாப்ரியோவுக்கு ரூ.223 கோடியும், ஜெனிஃபர் லாரன்ஸுக்கு ரூ.186 கோடியும் வழங்கப்படுகிறது.
மேலும், இந்தப் படத்தில் ஜோனா ஹில், மார்க் ரைலன்ஸ், ராப் மார்கன், டைலர் பெர்ரி, மெரில் ஸ்ட்ரீப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கடந்த வருடம் கரோனா நெருக்கடியால் ஒத்திப்போடப்பட்ட இந்தப் படத்தின் வெளியீடு இந்த வருடம் சாத்தியமாகும் என்று நெட்ஃபிளிக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
முன்னதாக, க்வெண்டின் டாரண்டினோ இயக்கிய 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்' திரைப்படத்தில் நடித்ததற்காக, டிகாப்ரியோவும், ப்ராட் பிட்டும் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியைக் குறைத்துக் கொண்டனர். படத்தின் பட்ஜெட் சரியாக இருந்து, தயாரிப்பு நிறுவனம் முதலீடு செய்த பணத்தைச் சம்பாதிக்க அவர்கள் இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது.