இனப் பாகுபாடு சர்ச்சை காரணமாக தான் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை புறக்கணிக்க நினைத்ததாக நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் கூறியுள்ளார்.
பிப்ரவரி 28-ஆம் தேதி ஆஸ்கர் விழா நடைபெறுகிறது. இம்முறை விருதுகளுக்கான பரிந்துரைகளில் கறுப்பின கலைஞர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, பல ஹாலிவுட் பிரபலங்கள் ஆஸ்கர் விழாவை புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளனர். பலர் ஊடகங்களில் ஆஸ்கர் நடுவர் குழுவை விமர்சித்துள்ளனர்.
தற்போது நடிகர் சில்வர் ஸ்டாலோன் தானும் ஆஸ்கர் விழாவை புறக்கணிக்க நினைத்ததாகக் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய ஸ்டாலோன், "நான் ரயனிடம் பேசினேன். ரயன், நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்? நான் இதற்கு பரிந்துரைக்கப்பட நீங்கள் தான் காரணம். நீங்கள் போக வேண்டாம் என்றால் நான் போக மாட்டேன் எனக் கூறினேன். ஆனால் அவர் என்னை விழாவுக்குப் போகச் சொன்னார். படத்துக்கான பிரதிநிதியாக இருக்கச் சொன்னார். அதுதான் அவரது பண்பு" என்று கூறியுள்ளார்.
க்ரீட் படத்தில் ஸ்டாலோன் நடித்ததற்காக, சிறந்த உறுதுணை நடிகர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆனால் இதே படத்தில் நடித்திருந்த மைக்கேல் ஜோர்டான் மற்றும் படத்தின் இயக்குநர் ரயன் கூக்ளர் இருவரும் எந்த விருதுக்கும் பரிந்துரைக்கப்படாததை பல ஹாலிவுட் பிரபலங்களும், ஊடகங்களும் விமர்சித்து வருகின்றன. இருவரும் கறுப்பினத்தவர்கள் என்பதால் இந்த அரசியல் என சர்ச்சை எழுந்துள்ளது.