'தி ரெவனென்ட்' (The Revenant) படத்துக்காக நடிகர் லியார்னடோ டி காப்ரியோ சிறந்த நடிகருக்கான பாஃப்தா விருதினைப் பெற்றுள்ளார்.
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிக்கான பிரிட்டிஷ் அகாடமி விருதுகள் ஆஸ்கரைப் போல ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்றனர். சுருக்கமாக பாஃப்தா (BAFTA) என அழைக்கப்படும் இவ்விருது வழங்கும் விழாவின் 69-வது ஆண்டு விழா லண்டனில் நடைபெற்றது.
இவ்விழாவில் 'தி ரெவனென்ட்' திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ஒலிப்பதிவுக்கான விருதுகளைப் பெற்றது. 'டைட்டானிக்' நாயகி கேட் வின்ஸ்லெட், 'ஸ்டீவ் ஜாப்ஸ்' படத்துக்காக, சிறந்த உறுதுணை நடிகை விருதை வென்றார்.
சிறந்த நடிகைக்கான விருது 'ரூம்' (Room) படத்தில் நடித்த ப்ரீ லார்சனுக்கு கிடைத்தது. 'மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோட்' (Mad Max: Fury Road) திரைப்படம் 4 விருதுகளை வென்றது.
'தி ரெவெனன்ட்' படத்துக்காக, ஏற்கனவே டி காப்ரியோ, க்ரிடிக்ஸ் சாய்ஸ், சிக்காகோ மற்றும் பாஸ்டன் திரை விமர்சகர்கள், ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட், கோல்டன் க்ளோப் உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார். தற்போது பாஃப்தா விருதினால், டி காப்ரியோ ஆஸ்கரும் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.