ஆஸ்கர் 2021 விருது வழங்கும் விழாவைத் தொலைக்காட்சி வழியாகப் பார்த்தவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு குறைந்துள்ளது.
உலகம் முழுவதும் நிலவி வரும் கரோனா நெருக்கடி காரணமாக இம்முறை ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் மேடைத் தொகுப்பாளர் என்று தனியாக யாரும் இல்லாமல் நடந்த விழாவில் விருதினை அறிவிக்க, வழங்கிட பிரபல நட்சத்திரங்கள் மேடையேறினார்கள்.
டால்பி தியேட்டரில் மட்டுமல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் அரங்கிலும் இம்முறை விழா நடந்தது. மேலும், விழாவில் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை 170 என்ற எண்ணிக்கையில் கட்டுப்படுத்தப்பட்டது. தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை எவ்வளவு பேர் பார்த்தார்கள் என்கிற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் மொத்தம் 1.4 கோடி பார்வையாளர்களை மட்டுமே இந்த வருட ஆஸ்கர் விழா, தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஈர்த்துள்ளது. இதுவரை ஒளிபரப்பான ஆஸ்கர் விழாக்களில் இதுதான் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்னொரு பக்கம் நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்பிய ஏபிசி தொலைக்காட்சி, இந்த வருடம் ஒளிபரப்பான ப்ரைம் டைம் நிகழ்ச்சிகளில் இதுதான் அதிக எண்ணிக்கை பார்வையாளர்களைக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமி, கடந்த மாதம் ஒளிபரப்பான கோல்டன் க்ளோப்ஸ் ஆகிய விருது வழங்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கூடத் தொடவில்லை.