ஸ்பீல்பெர்க்கைப் பெருமைப்படுத்தவே வாழ்கிறேன் என நடிகை ட்ரூ பேரிமோர் கூறியுள்ளார்.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1982ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஈ.டி. எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல்’. ஏலியன் படங்களுக்கு முன்னோடியான இப்படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றது. அந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் நான்கு விருதுகளைக் குவித்தது. இப்படத்தின் குழந்தை நட்சத்திரமாக ட்ரூ பேரிமோர் நடித்திருந்தார். இப்படம் மூலம் அவர் ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமானார். பின்னாட்களில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் மாறினார்.
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ட்ரூ பேரிமோர் பற்றி ஸ்பீல்பெர்க் குறிப்பிட்டிருந்தார். அதில் அவர் கூறும்போது, ''இப்போது நான் அவர் (ட்ரூ பேரிமோர்) மீது அக்கறை கொண்டுள்ளேன். தங்க நிறத் தலைமுடி கொண்ட அந்தச் சிறிய சூறாவளி ஆடிஷனுக்காக என்னுடைய அலுவலகத்துக்குள் நுழைந்தது முதல் இப்போது வரை. எங்களை ஆட்கொண்ட அந்தச் சூறாவளி விரைவிலேயே உலகத்தையும் ஆட்கொண்டது. பல ஆண்டுகளாக அவர் என்னைத் தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறார்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
ஸ்பீல்பெர்க்கின் இந்தப் பேட்டிக்கு பதிலளிக்கும் வகையில் ட்ரூ பேரிமோர் கூறியிருப்பதாவது:
''எனக்கு மிகவும் முக்கியமான மனிதர்களில் ஒருவரான நீங்கள்தான் நான் பொறுப்பான மற்றும் சிறந்த பெண்ணாக இருப்பதற்கு கற்றுக் கொடுத்தீர்கள். அதுதான் என்னை முழுமையான ஒரு பெண்ணாக உணர உதவியது. நான் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒன்றைச் செய்யும்போது, இதுகுறித்து ஸ்பீல்பெர்க் என்ன நினைப்பார், என்னைப் பற்றி எப்படி உணர்வார் என்றே எப்போதும் நினைக்கிறேன். உங்களைப் பெருமைப்படுத்தவே நான் வாழ்கிறேன்''.
இவ்வாறு ட்ரூ பேரிமோர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.