ஹாலிவுட்

எனக்கு ஹனுமன் சூப்பர் ஹீரோதான்: ஹாலிவுட் நடிகர் டோனி ஜா

ஐஏஎன்எஸ்

கடவுள் ஹனுமனைத் தான் சூப்பர் ஹீரோவாகப் பார்ப்பதாக ஹாலிவுட் நடிகர் டோனி ஜா கூறியுள்ளார்.

’ஆங் பேக்’, ’டாம் யம் கூங்’ உள்ளிட்ட தற்காப்புக் கலை ஆக்‌ஷன் திரைப்படங்கள் மூலம் சர்வதேசப் பிரபலமாக வளர்ந்தவர் தாய்லாந்தைச் சேர்ந்த டோனி ஜா. தொடர்ந்து இவரது படங்கள் ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றன. ’ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ திரைவரிசையின் 7-வது பாகத்திலும், ’ட்ரிபிள் எக்ஸ்’ திரைப்படத்தின் மூன்றாவது பாகத்திலும் டோனி ஜா நடித்திருந்தார்.

அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், தான் பாலிவுட் ஆக்‌ஷன் திரைப்படங்களின் மிகப்பெரிய ரசிகன் என்றும், தனக்கு வாய்ப்பு கிடைத்தால் ஹனுமன் கதாபாத்திரத்தைத் திரையில் கொண்டு வர விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

"எனக்கு பாலிவுட் படங்களை நன்றாகத் தெரியும். ஆக்‌ஷன் படங்களும்தான். டைகர் ஷ்ராஃப், வித்யுத் ஜம்வால், ராணா, ஆமிர் கான், ஷாரூக் கான் அனைவரையும் தெரியும். நான் பாலிவுட் படங்களின் பெரிய ரசிகன் என்பதால் இவர்களைத் தெரிந்து வைத்திருக்கிறேன். எனக்குக் கடவுள் ஹனுமனையும் பிடிக்கும். அவர் ஒரு சூப்பர் ஹீரோ.

ஹனுமன் கதாபாத்திரத்தில் நான் நடித்தால் சிறப்பாக இருக்கும். மேலும் டிசி அல்லது மார்வலின் சூப்பர் ஹீரோவாக நடிக்கவும் எனக்கு ஆசை. அதுதான் என் கனவு. ஸ்பைடர்மேன், பேட்மேன் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமுள்ளது. என் கனவு நனவானால் நன்றாக இருக்கும்.

இன்னும் பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து நான் கற்க விரும்புகிறேன். பள்ளிக்கோ, பல்கலைக்கழகத்துக்கோ புதிதாகக் கற்கச் செல்லும் மாணவனைப் போலத்தான் நான். ஏனென்றால் ஹாலிவுட் எனக்குப் புதிய உலகம். அதன் தொழில்நுட்பத்தைக் கற்க விரும்புகிறேன்.

ஹாலிவுட்டில் இன்னும் பல ஆசிய நடிகர்கள் நடிக்க வேண்டும். ஒரு கலாச்சாரப் பரிமாற்றம் போல பலர் இணைந்து கூட்டாக, அணியாக வேலை செய்ய வேண்டும்" என்று டோனி ஜா பேசியுள்ளார்.

’மான்ஸ்டர் ஹன்டர்’ என்கிற ஹாலிவுட் திரைப்படத்தில் டோனி ஜா நடித்துள்ளார். பிப்ரவரி 5ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் இந்தப் படம் 3டியில் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT