ஹாலிவுட்

கலக்கல் ஹாலிவுட்: புத்தகத்திலிருந்து தப்பிச்சென்ற கதாபாத்திரங்கள்

பவித்ரா ஷங்கர்

ஆங்கிலத்தில் கதைகளை வாசிக்கும் இந்தியச் சிறுவர் சிறுமியருக்கும் பரிச்சயமான திகில்கதை வரிசைதான் ‘கூஸ்பம்ப்ஸ்’. அந்தக் கதையின் கதாபாத்திரங்களை மையமாக வைத்து, கூஸ்பம்ப்ஸ் என்ற பெயரிலேயே ஹாலிவுட் சினிமா வெளியாகி, அமெரிக்காவைக் கலக்கிவருகிறது.

மிகப்பெரிய எண்ணிக்கையில் வாசகர்களைக் கட்டிப்போட்ட கதைகளை சினிமாவாக எடுப்பது இன்றும் அபாய விளையாட்டாகவே இருக்கிறது. ஏனெனில் எழுத்தைப் போல சினிமா கவரவில்லையென்ற விமர்சனத்தை சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள் பார்வையாளர்கள். அதுவும் கதைவாசிக்கும் குழந்தைகளைக் கவர்ந்த ‘கூஸ்பம்ப்ஸ்’ கதையைப் படமாக்குவது கூடுதலான சவால். அமெரிக்காவில் வெளியான முதல் வாரத்திலேயே 24 மில்லியன் டாலரை வசூலித்து பாக்ஸ் ஆபிசில் தன்னை நிரூபித்துள்ளது இப்படம். இந்தியாவில் இந்த மாதக்கடைசியில்(அக்டோபர் 30) வெளியாகவுள்ளது.

கூஸ்பம்ப்ஸ் திரைப்படத்தின் இயக்குநர், உலகம் முழுவதும் குழந்தைகளைக் கவர்ந்த ஷார்க் டேல், மான்ஸ்டர் விஎஸ் ஏலியன்ஸ் போன்ற வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கிய ராப் லெட்டர்மேன்.

பெருநகரம் ஒன்றிலிருந்து பெற்றோருடன் சிறுநகரத்துக்கு விருப்பமில்லாமல் வசிக்கச் செல்லும் சிறுவன் ஜாக் கூப்பருக்கு அவனது பக்கத்து வீட்டில் இருக்கும் அழகிய ஹன்னா தோழியாகிறாள். அவளது தந்தைதான் கூஸ்பம்ப்ஸ் கதைத்தொடரின் ஆசிரியரான ஆர்.எல்.ஸ்டைன். ஒரு சூழ்நிலையில் ஜாக் கூப்பர் கூஸ்பம்ப்ஸ் கதாபாத்திரங்களை புத்தகத்திலிருந்து அவனை அறியாமல் விடுவித்துவிடுகிறான். நூலாசிரியர் ஆர்.எல்.ஸ்டைனும், ஜாக்கும் சேர்ந்து நிஜ உலகத்தில் அட்டகாசம் செய்யும் கதாபாத்திரங்களை எப்படி வழிக்குக் கொண்டுவந்து மறுபடியும் புத்தகத்துக்குள் கொண்டுவிடுகிறார்கள் என்பதுதான் கதை.

கூஸ்பம்ஸ் குழந்தைகளை மகிழ்விப்பதோடு பெரியவர்களையும் கவர்ந்துள்ளதாக அமெரிக்கப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பில் கிளிண்டன் காலத்தில் கதை நடப்பதால் அக்காலகட்டத்தில் சிறுவர்களாக இருந்த பெரியவர்களுக்கு இப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் மிகவும் பிடித்துள்ளன. திடீர் திருப்பங்களும், திகிலும் நிறைந்த கூஸ்பம்ஸ் திரைப்படம் ஒரு நீதியையும் சொல்கிறதாம்.

“எந்தப் பின்னணியிலிருந்து ஒருவர் வருகிறார் என்பது முக்கியமல்ல. பிறரை அவர் எப்படி நடத்துகிறார் என்பதே கவனிக்க வேண்டியது” என்பதுதான் அந்த நீதி.

SCROLL FOR NEXT