’மிஸ்டர் பீன்’ கதாபாத்திரத்தின் மூலம் சர்வதேசப் புகழ் பெற்ற நடிகர் ரோவன் அட்கின்ஸன், அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தது மன அழுத்தமும், மனச் சோர்வையும் தந்ததாகக் கூறியுள்ளார்.
தற்போது 65 வயதான அட்கின்ஸன், ’மிஸ்டர் பீன்’ கதாபாத்திரத்தை வைத்து அனிமேஷன் திரைப்படம் ஒன்றை உருவாக்கி வருகிறார். 1990 முதல் 1995 வரை அவர் ’மிஸ்டர் பீன்’ தொடரில் நடித்தார். 1997ஆம் ஆண்டு ’பீன்’ என்கிற திரைப்படமும், 2007ஆம் ஆண்டு ’மிஸ்டர் பீன்ஸ் ஹாலிடே’ என்கிற திரைப்படமும் வெளியானது. இதிலும் ரோவன் அட்கின்ஸன் பீன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது இந்தக் கதாபாத்திரம் குறித்துப் பேசியுள்ள அட்கின்ஸன், "தொலைக்காட்சிக்காக அனிமேஷன் தொடரை எடுத்திருக்கிறோம். இப்போது அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதை விட குரல் கொடுப்பது எனக்கு எளிதாக இருக்கிறது.
அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதை நான் ரசிக்கவில்லை. பொறுப்பின் அளவு ரசிக்கவிடவில்லை. மன அழுத்தமும், மனச் சோர்வும் தருவதாக இருந்தது. இப்போது அந்தக் கதாபாத்திரத்துக்கு நிறைவைத் தர வேண்டும் என்பதை எதிர் நோக்கியிருக்கிறேன்.
ஆனால் அந்தக் கதாபாத்திரத்தின் வெற்றியில் எனக்கு ஆச்சரியமில்லை. வளர்ந்த ஒரு நபர் குழந்தை போல நடந்து கொள்வதும், தனது முறையற்ற நடத்தையைப் பற்றிக் கொஞ்சம் கூட தெரியாமல் இருப்பதும் அடிப்படையில் பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும். மேலும் அந்த நகைச்சுவை அனைத்தும் வசனமாக இல்லாமல் நடத்தையில், காட்சிகளிலேயே இருந்ததால் சர்வதேச அளவிலும் வெற்றி பெற்றது" என்று கூறியுள்ளார்.
1983ஆம் ஆண்டில் ஆரம்பித்து 1989 வரை அட்கின்ஸன் ’ப்ளாக்ஆடர்’ என்கிற நகைச்சுவைத் தொடரையும் எழுதி நடித்தார். தனக்கு எதையும் ஆரம்பத்திலிருந்து உருவாக்கும் முறை பிடிக்காது என்று கூறும் அட்கின்ஸன் ப்ளாக்ஆடருக்கு மட்டும் அது பொருந்தாது என்கிறார்.
"ஏனென்றால் அந்தத் தொடரை நகைச்சுவையாகக் கொண்டு வர வேண்டும் என்கிற பொறுப்பு என்னிடம் மட்டுமே இல்லை, பலரது தோள்களில் இருந்தது" என்று கூறுகிறார் அட்கின்ஸன்.