‘ஸ்பைடர்மேன்-2’ படத்தில் வில்லனாக நடித்திருந்த ஆல்ஃப்ரெட் மொலீனா, அடுத்து வெளியாக உள்ள ஸ்பைடர்மேன் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சோனி-மார்வல் இணை தயாரிப்பாக, 2019ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், திடீரென சோனி- மார்வல் நிறுவனங்களுக்கிடையே காப்புரிமை தொடர்பான பிரச்சினை வந்து இரண்டு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்போது ஸ்பைடர்மேன் பட வரிசையில் அடுத்த பாகத்தை இரண்டு தரப்பும் சேர்ந்தே தயாரிக்கின்றன.
கடந்த ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் முக்கியப் பாத்திரங்களாக நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, மாரிஸா டோமீ உள்ளிட்ட அனைவருமே இந்தப் படத்திலும் நடித்து வருகின்றனர்.
2004ஆம் ஆண்டு சாம் ரெய்மி இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘ஸ்பைடர்மேன்-2’ படத்தில் நடித்திருந்தவர் ஆல்ஃப்ரெட் மொலீனா. இவர் ஏற்று நடித்திருந்த டாக்டர் ஆக்டோபஸ் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. இந்தச் சூழலில் இந்த ஆக்டோபஸ் கதாபாத்திரத்தை மீண்டும் திரைக்குக் கொண்டு வரவுள்ளதாகவும், அதில் ஆல்ஃப்ரெட் மொலீனாவே மீண்டும் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே ‘தி அமேசிங் ஸ்பைடமேன் - 2’ படத்தில் வில்லனாக நடித்த ஜேமி ஃபாக்ஸை இப்படத்திலும் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், மீண்டும் ஏற்கெனவே இடம்பெற்ற பழைய ஸ்பைடர்மேன் படத்தில் இடம்பெற்றிருந்த வில்லன் கதாபாத்திரத்தை மீண்டும் கொண்டு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.