ஹாலிவுட்

திரையரங்கில் வெளியாகும் அதே நாளில் ஓடிடியிலும் ரிலீஸ்: வார்னர் பிரதர்ஸின் அதிரடி அறிவிப்பு

ஐஏஎன்எஸ்

2021-ம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் திரையரங்கில் வெளியான அதே நாளில் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கரோனா நெருக்கடி காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டதால் பல்வேறு பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் வெளியீடுகள் ஒத்திவைக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகள் திறக்கப்பட்டு கிறிஸ்டோஃபர் நோலனின் பிரம்மாண்ட படைப்பான 'டெனெட்', மார்வல்லின் 'நியூ ம்யூடன்ட்ஸ்' உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

குறிப்பாக அமெரிக்காவில் கரோனா தொற்று இன்னும் கட்டுப்படுத்தப்படாமல் அதிக அளவு பரவி வருவதால் மக்கள் திரையரங்குக்கு வரத் தயக்கம் காட்டி வருகின்றனர். ரசிகர்கள் வருகை குறைந்ததால் அமெரிக்கா, பிரிட்டன் எனப் பல நாடுகளில் எண்ணற்ற திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதில் ஜூன் மாதம் வெளியாகவிருந்த வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பான 'வொண்டர் வுமன் 1984', டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 'டெனெட்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து ‘வொண்டர் வுமன்’ வெளியீடு குறித்துத் தயாரிப்புத் தரப்பு மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்தது.

நவம்பர் மாதம், படத்தை நேரடியாக டிஜிட்டலில் வெளியிடலாமா, அல்லது படம் திரையரங்குகளில் வெளியான சில வாரங்கள் கழித்து வெளியிடலாமா அல்லது இன்னும் ஒத்தி வைக்கலாமா எனப் பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. முடிவில், ஓடிடி, திரையரங்குகள் என இரண்டிலும் ஒரே நாளில் 'வொண்டர் வுமன் 1984' வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 'வொண்டர் வுமன்' படத்தைப் போலவே அடுத்த ஆண்டு வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் அத்தனை திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில் ஹெச்பிஓ மேக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.

ஹெச்பிஓ மேக்ஸ் சந்தாதாரர்கள் அனைவரும் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்தாமல் இந்தப் படங்களைப் பார்க்கலாம். வெளியாகி 1 மாதம் வரை இந்தப் படங்கள் ஓடிடியில் இருக்கும். அதன்பின் நீக்கப்படும்.

'டாம் அண்ட் ஜெர்ரி', 'காட்ஸில்லா வெர்சஸ் காங்', 'தி கான்ஜூரிங்: டெவில் மேட் மி டூ இட்', 'தி சூஸைட் ஸ்குவாட்', 'ட்யூன்', 'மேட்ரிக்ஸ் 4' உள்ளிட்ட 17 திரைப்படங்கள் இப்படி வெளியாகவுள்ளன.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும், திரையரங்க உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

SCROLL FOR NEXT