ப்ளாக் பேந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜூலை மாதம் அட்லாண்டாவில் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹீரோ திரைப்படமான ப்ளாக் பேந்தர் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக கருப்பின மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. நாயகன் சாட்விக் போஸ்மேனை சர்வதேச நட்சத்திரமாகவும் உயர்த்தியது. எனவே இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது.
ஆனால் 2016ஆம் ஆண்டிலிருந்து புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்திருந்த நாயகன் போஸ்மேன், கடந்த ஆகஸ்ட் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது வீட்டில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்கவிருந்த இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தற்போது அடுத்த வருடம் ஜூலை மாதம் ஆரம்பித்து ஆறு மாதங்களில் இந்தப் படத்தை முடிக்க மார்வல் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக ஹாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் முதல் பாகத்தில் ஷூரி என்கிற நாயகனின் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்த லெடிடா ரைட்டுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம் சாட்விக் போஸ்மேனுக்கு பதிலாக யார் நாயகனாக நடிப்பார்கள் என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மார்வல் தரப்பிலிருந்து இது குறித்த எந்த தகவலும் இல்லை. ஆனால் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறைந்த போஸ்மேனை படத்துக்குள் கொண்டு வரும் திட்டம் இல்லை என்று மார்வல் ஏற்கனவே தெரிவித்துள்ளது.