‘தி சூஸைட் ஸ்க்வாட்’ படத்தில் சில்வஸ்டர் ஸ்டாலோன் இருக்கிறார் என்பதை இயக்குநர் ஜேம்ஸ் கன் உறுதி செய்துள்ளார்.
மார்வலுக்குப் போட்டியாக டிசி காமிக்ஸ் எடுத்து வரும் திரைப்பட வரிசையில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’சூஸைட் ஸ்க்வாட்’. டேவிட் ஏர் இயக்கியிருந்த இந்தப் படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூலைப் பெற்றது.
ஆனால், இந்த வடிவத்தில் திருப்தியடையாத தயாரிப்பாளர்கள் ஜேம்ஸ் கன்னை இயக்குநராக வைத்து முதல் பாகத்தின் மறைமுகத் தொடர்ச்சியாகவும், மறு தொடக்கம் போலவும் புதிய ‘சூஸைட் ஸ்க்வாட்’ படத்தை உருவாக்க முடிவு செய்தனர். ஜேம்ஸ் கன் ஏற்கெனவே மார்வல் சினிமா உலகில் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ திரைப்படங்கள் மூலம் தன்னை நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதிய ‘சூஸைட் ஸ்க்வாட்’ படத்தில் பிரபல நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோனும் ஒரு முக்கியப் பங்கு வகிப்பதை ஜேம்ஸ் கன் உறுதி செய்துள்ளார்.
"என்றுமே எனது நண்பர் சில்வஸ்டர் ஸ்டாலோனுடன் பணியாற்றுவதை விரும்புவேன். இன்று சூஸைட் ஸ்க்வாடில் நாங்கள் பணியாற்றியபோதும் அப்படியே. அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் என்பதைத் தாண்டி எவ்வளவு அற்புதமான நடிகர் என்பது பலருக்குத் தெரியவில்லை" என்று ஜேம்ஸ் கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோடு ஸ்டாலோனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். கிங் ஷார்க் என்கிற கதாபாத்திரத்துக்கு ஸ்டாலோன் குரல் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்து ஸ்டாலோனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மார்கட் ராபி, வையோலா டேவிஸ், ஜான் ஸீனா, இட்ரிஸ் எல்பா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படம் அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.