சிறுவயது முதலே பல்வேறு நாடகங்களில் நடித்து பின்னர் 1994ஆம் ஆண்டு வெளியான ‘நார்த்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்கார்லெட் ஜொஹன்ஸன். அதனைத் தொடர்ந்து மேனி & லோ, தி ஹார்ஸ் விஸ்பெரர், கோஸ்ட் வேர்ல்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு வெளியான ‘அயர்ன்மேன் 2’ படத்தின் மூலம் மார்வெல் சினிமாட்டிக் உலகத்தில் ப்ளாக் விடோவாக அறிமுகமானார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் உலகமெங்கும் பிரபலமடைந்த ஸ்கார்லெட், தற்போது உலகின் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.
கடந்த ஆண்டு வெளியான ‘மேரேஜ் ஸ்டோரி’ படத்துக்கான சிறந்த நடிகைக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது ஆஸ்கர் விருது பெற்ற இயக்குரான செபாஸ்டியன் லிலியோ இயக்கவுள்ள புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
‘ப்ரைட்’ (Bride) என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படத்தை ஸ்கார்லெட் ஜொஹன்ஸனே தயாரிக்கவும் செய்கிறார். விரைவில் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்கார்லெட் ஜொஹன்ஸன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ப்ளாக் விடோ’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆனால் உலகமெங்கும் ஏற்பட்ட கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இப்படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.