ஹாலிவுட்

எல்லோரிடமும் ஒப்புதல் பெற முடியாது: இணையக் கிண்டல்கள் குறித்து கியாரா அத்வானி கருத்து

ஐஏஎன்எஸ்

முகச் சுருக்கத்தை மறைக்க போடாக்ஸ் சிகிச்சை மேற்கொண்டதாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டதாக நடிகை கியாரா அத்வானி கூறியுள்ளார்.

கடந்த வருடம் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு பலர் தன்னைத் தோலுக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டியதாகக் கூறுகிறார் கியாரா அத்வானி. அன்று தனது சமூக வலைதளப் பக்கங்களில் பின்னூட்டம் வரும் தகவலை (notification) அணைத்து வைத்தது இன்று வரை தொடர்வதாகக் கூற்கிறார்.

"முதலில் என் அம்மா இது (கிண்டல்கள்) பற்றி வருத்தப்பட்டார். என்னிடம் சொல்லவும் மாட்டார். ஏனென்றால் நான் அதையெல்லாம் படிக்க மாட்டேன் என்பது அவருக்குத் தெரியும். அதை யாராவது ஒருவர் செய்தியாக்கி தலைப்பாக வந்தாலேயொழிய எனக்குத் தெரியவராது.

என்னைப் பொறுத்தவரை நான் சின்னச் சின்ன விஷயங்களுக்கு வருத்தப்பட மாட்டேன். இந்தக் கிண்டல்கள் எல்லாம் முக்கியமானவை அல்ல. இதைவிடப் பெரிய விஷயங்கள் உள்ளன. ஆனால், நாம் படிப்பது அனைத்துமே உண்மையல்ல என்பது அனைவருக்கும் தெரிந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

சில சமயங்களில் எனது முழு ஒப்பனையையும் நானே செய்துகொள்வேன். ஒரு முறை அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு ஒப்பனை செய்துகொண்டு போனபோது, அது சரியாக இல்லை. எனது கண் அடிபட்டது போலத் தெரிந்தது. உடனே நான் போடாக்ஸ் சிகிச்சை மேற்கொண்டதாக பேச ஆரம்பித்துவிட்டனர். அப்போது என்னை மோசமாகக் கிண்டல் செய்தது மட்டுமே எனக்கு ஒழுங்காக நினைவில் இருக்கிறது. அன்று தான் என்னைப் பற்றி வரும் கமெண்டுகளை, தகவல்களை அணைத்து வைக்க முடிவு செய்தேன்.

எல்லோரிடமும் ஒப்புதல் பெற முடியாது. ஆனால், நடிகர்களாகிய நாங்கள் அதைத்தான் செய்ய முயல்கிறோம். எனக்கு என் இயக்குநர் என்ன நினைக்கிறார் என்பதே முக்கியம்" என்று கியாரா அத்வானி கூறியுள்ளார்.

அக்‌ஷய் குமார், கியாரா நடிப்பில் 'லட்சுமி பாம்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT