அடுத்த 'ஸ்பைடர் மேன்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இடம்பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகவுள்ளது.
சோனி-மார்வல் இணை தயாரிப்பாக, 2019 ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்' மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், திடீரென சோனி- மார்வல் நிறுவனங்களுக்கிடையே காப்புரிமை தொடர்பான பிரச்சினை வந்து இரண்டு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்போது 'ஸ்பைடர் மேன்' பட வரிசையில் அடுத்த பாகத்தை இரண்டு தரப்பும் சேர்ந்தே தயாரிக்கின்றன.
கடந்த ‘ஸ்பைடர் மேன்’ படங்களில் முக்கியப் பாத்திரங்களாக நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, மாரிஸா டோமீ உள்ளிட்ட அனைவருமே இந்தப் படத்திலும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் வில்லன் ‘எலெக்ட்ரோ’ கதாபாத்திரத்தில் ஆஸ்கர் விருது பெற்ற நடிகரான ஜேமி ஃபாக்ஸ் நடிக்கவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது.
முந்தைய 'ஸ்பைடர் மேன்' படங்களில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்திற்கு ஒரு வழிகாட்டி போல அயர்ன்மேன் தோன்றுவார். ஆனால் கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தில் அயர்ன்மேன் கதாபாத்திரம் இறந்துவிட்டதைப் போல காட்சியமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அடுத்த 'ஸ்பைடர் மேன்' படத்தில் அயர்ன்மேன் கதாபாத்திரத்துக்குப் பதிலாக டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் புதிய 'ஸ்பைடர் மேன்' படத்தின் படப்பிடிப்பு அட்லாண்டாவில் தொடங்கவுள்ளது. ஆனால், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பெனடிக்ட் கும்பர்பெட்ச் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு எப்போது என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.