ஹாலிவுட்

ட்ரைவ் - இன் அரங்கில் திரையிட்டாலும் ஆஸ்கருக்குத் தகுதி பெறலாம்: புதிய விதி அறிவிப்பு

ஏஎன்ஐ

சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பொதுப் பிரிவுகளுக்கு, ட்ரைவ்-இன் அரங்குகளில் திரையிட்ட திரைப்படங்களும் தகுதி பெறும் என்கிற புதிய விதியை அகாடமி அறிவித்துள்ளது.

கரோனா நெருக்கடி காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகத் திறக்கப்பட்டு வருகிறது. இருந்தும் ரசிகர்கள் பொது இடங்களுக்கு வரத் தயங்குவதால் பல முக்கியத் திரைப்படங்கள் தங்களது வெளியீட்டை அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைத்துள்ளன.

இன்னும் சில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்குத் தகுதி பெற வேண்டுமென்றால் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடியிருக்க வேண்டும் என்கிற விதி வரும் வருடத்துக்கான ஆஸ்கர் விழாவுக்கு மட்டும் தளர்த்தப்பட்டது.

புதிய விதிகளின் படி, திரையரங்கில் வெளியாக திட்டமிட்டிருந்து நேரடியாக டிஜிட்டலில் வெளியான திரைப்படங்களை, அகாடமிக்கான பிரத்யேகத் திரையிடல் அறையில் திரையிட்டு ஆஸ்கருக்குப் போட்டியிடலாம். இது படம் டிஜிட்டலில் வெளியான 60 நாட்களுக்குள் நடக்க வேண்டும். திரையரங்கில் வெளியாகும் படங்களுக்கு இது கட்டாயம் கிடையாது.

அப்படித் திரையரங்கில் வெளியாகும் படங்கள், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், சான் ஃபிரான்சிஸ்கோ, சிகாகோ, மயாமி, அட்லாண்டா ஆகிய நகரங்களில் ஏதாவது ஒரு நகரத்தில் வெளியாகி, 7 நாள் ஓடி முடித்தால் அது ஆஸ்கருக்குப் போட்டியிடலாம். இதில் ஒரு காட்சியாவது மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிக்குள் திரையிடப்பட்டிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் இருக்கும் ட்ரைவ்-இன் தியேட்டர்களில் வெளியிட்டாலும் இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒரு நாளில் ஒரு முறை திரையிடப்பட்டிருந்தால் போதும்.

இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பையும் அகாடமி வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று ஆஸ்கர் விழா நடக்கவுள்ளது.

SCROLL FOR NEXT