பிரெஞ்சில் 2002-ல் வெளிவந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘த டிரான்ஸ்போர்ட்டர்’. இந்தப் படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து இதே வரிசையில் மேலும் இரண்டு படங்கள் வெளியாகி வெற்றிபெற்றன. டிரான்ஸ்போர்ட்டர் வகைப் படத்தின் நாயகன் ஃப்ராங் மார்டின் திறமைசாலியான கூரியர் வாகன ஓட்டுநர். எந்தப் பொருளையும் எங்கேயும் சரியான நேரத்தில் கொண்டுசேர்ப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.
அவரது சாகசங்கள் ரசிகர்களை நாற்காலியின் நுனியிலேயே இருத்தும் வல்லமை பெற்றவை. ஆகவே டிரான்ஸ்போர்ட்டர் வரிசைப் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்போது கெமி டியூலமா இயக்கத்தில் வெளிவர உள்ள ‘த டிரான்ஸ்போர்ட்டர் ரீஃப்யூவல்டு’ இந்தப் பட வரிசையில் நான்காம் படம்.
முதல் மூன்று படங்களிலும் நாயகனாக ஜேஸன் ஸ்டேட்ஹம் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அந்த வேடத்தை எட் ஸ்கான் என்னும் நடிகர் ஏற்று நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ பட வரிசையில் வெளிவந்த மூன்றாம் படம் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2014-ம் ஆண்டு ஆகஸ்டில் பாரிஸில் தொடங்கியது. அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இன்றும் பிரான்ஸில் செப்டம்பர் 9 அன்றும் வெளியாகவிருக்கிறது. இந்தப் படம் சுமார் 199 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ப்ராங்கின் தந்தை அவரை தெற்கு பிரான்ஸுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு ப்ராங்க் ஒரு வஞ்சகப் பெண்ணை யும், அவருடைய கூட்டாளிகளையும் சந்திக்கிறார். அவர்களது வலையிலிருந்து ப்ராங்க் எப்படித் தப்பிக்கிறார் என்பதை விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அடுத்தடுத்துப் பரபரவென நகரும் படத்தில் ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும் சேஸிங் காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை.
பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளிக்கும் காதல் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களைத் திரையரங்கில் கட்டிப் போட்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை. லூக் பெஸனின் யூரோபா கார்ப் நிறுவனமும், சீனாவின் ஃபண்டமெண்டல் ஃபில்ம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. இதுவரை வெளியான மூன்று படங்களுமே வசூலை வாரிக் கொடுத்துள்ளதால் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு மிக அதிக அளவில் உள்ளது.