1962 ஆம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 24 படங்கள் வெளியாகியுள்ளன. வியக்கவைக்கும் ஆக்ஷன் காட்சிகள், புதிய தொழில்நுட்பங்கள், விறுவிறுப்பான திரைக்கதைகளைக் கொண்ட இப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.
கடைசியாக வெளியான நான்கு படங்களில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்க் நடித்து வருகிறார். அடுத்ததாக வெளியாகவுள்ள 'நோ டைம் டு டை', ஜேம்ஸ் பாண்டாக க்ரெய்க் நடிக்கும் கடைசிப் படமாகும். இப்படத்தை கேரி ஜோஜி இயக்கியுள்ளார். உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதியே வெளியாகவிருந்த இப்படம் வரும் நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்க் நடிக்கும் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இப்படத்தின் புதிய ட்ரெய்லர் ஒன்றை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். வெளியான 24 மணி நேரங்களுக்குள்ளாகவே பல லட்சம் பார்வைகளை பெற்று இந்த ட்ரெய்லர் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் 'நோ டைம் டு டை' ஹாஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டானது. ரசிகர்கள் பலரும் இந்த ட்ரெய்லரை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த முந்தைய ஜேம்ஸ் பாண்ட் படமான ‘ஸ்பெக்ட்ரே’வில் வில்லன் ப்ளோஃப்ளெட் ஆக நடித்த க்றிஸ்டோஃபர் வால்ட்ஸ் இந்த ட்ரெய்லரிலும் ஒரு காட்சியில் தோன்றுகிறார்.
இப்படத்தில் நோமி என்ற பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அடுத்த ஜேம்ஸ் பாண்ட் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஜேம்ஸ் பாண்ட் வரலாற்றில் 007 ஏஜென்டாக ஒரு பெண் நடிப்பது இதுவே முதல் முறை.
டேனியல் க்ரெய்குக்கு இந்த படம் ஒரு சிறந்த வழியனுப்புதலாக இருக்கும் என்று ஹாலிவுட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.