2017-ம் ஆண்டு டிசி காமிக்ஸின் 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படம் வெளியானது. ஏற்கெனவே டிசி சினிமா உலகில் 'மேன் ஆஃப் ஸ்டீல்', 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸேக் ஸ்னைடர், 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதிக்கட்ட வேலைகளின்போது ஸ்னைடரின் மகள் தற்கொலை செய்து கொண்டதால் ஸ்னைடரால் படத்தின் வேலைகளைத் தொடர்ந்து கவனிக்க முடியாமல் போனது.
படத்தில் சில கூடுதல் காட்சிகளைச் சேர்க்க, 'அவெஞ்சர்ஸ்' முதல் இரண்டு பாகங்களை இயக்கிய ஜாஸ் வீடன் உதவியை ஸ்னைடர் ஏற்கெனவே நாடியிருந்ததால், வீடனை வைத்துப் படத்தை முடிக்க வைத்தது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். தொடர்ந்து படத்தின் சில பகுதிகள் மீண்டும் படப்பிடிப்பு செய்யப்பட்டன. படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது.
ஆனால், வெளியான படம், அசல் இயக்குநர் ஸாக் ஸ்னைடரின் பார்வையிலிருந்து விலகி விட்டதாகவும், ஸ்னைடர் எடுத்து முடித்த பதிப்பை வார்னர் பிரதர்ஸ் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதனைக் கருத்தில் கொண்டு ஸ்னைடர் எடுத்த 'ஜஸ்டிக் லீக்' படம் ஓடிடியில் வெளியாகும் என்று வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் டிசி காமிக்ஸின் அடுத்த தயாரிப்புகள் பற்றிய அறிவிப்புகள், முன்னோட்டங்கள் இணையம் வழியாக நடந்த 'டிசி ஃபேன்டம்' என்ற பொது நிகழ்ச்சியில் சனிக்கிழமை அன்று ரசிகர்களுடன் பகிரப்பட்டன. இந்த நிகழ்வில் ‘தி பேட்மேன்’, ‘வொண்டர் வுமன் 1984’, ‘ஜஸ்டிஸ் லீக் ஸ்னைடர் கட்’ ஆகிய படங்களின் ட்ரெய்லர்கள் வெளியிடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஸாக் ஸ்னைடர் பேசியதாவது:
''இது ஒரு அற்புதமான பயணம். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் ரசிகர்களுடன் அற்புதமான முறையில் தொடர்பு கொள்ளமுடிந்ததுதான். இது எங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் நீங்கள் இதற்குமுன் பார்த்திராத ஃப்ளாஷ் கதாபாத்திரத்தைக் காண்பீர்கள். இப்படம் ஓடிடியில் நான்கு பாகங்களாக வெளியாகவுள்ளது. ஒவ்வொரு பாகமும் ஒரு மணி நேரம் நீளம் இருக்கும்''.
இவ்வாறு ஸ்னைடர் பேசினார்.