ஹாலிவுட்

இது ஒரு மர்மம் நிறைந்த துப்பறியும் கதை: ‘தி பேட்மேன்’ குறித்து மேட் ரீவ்ஸ் பகிர்வு

ஐஏஎன்எஸ்

டிசி காமிக்ஸின் அடுத்த தயாரிப்புகள் பற்றிய அறிவிப்புகள், முன்னோட்டங்கள் இணையம் வழியாக நடந்த 'டிசி ஃபேன்டம்' என்ற பொது நிகழ்ச்சியில் சனிக்கிழமை அன்று ரசிகர்களுடன் பகிரப்பட்டன. இந்த நிகழ்வில் ‘தி பேட்மேன்’, ‘வொண்டர் வுமன் 1984’, ‘ஜஸ்டிஸ் லீக் ஸ்னைடர் கட்’ ஆகிய படங்களின் ட்ரெய்லர்கள் வெளியிடப்பட்டன.

இதில் ராபர்ட் பேட்டின்ஸன் நடிப்பில் மேட் ரீவ்ஸ் இயக்கியுள்ள ‘பேட்மேன்’ படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வழக்கமான இருள்தன்மையுடன் அமைந்துள்ள இந்த ட்ரெய்லரின் பின்னணியில் ‘நிர்வாணா’ இசைக்குழுவினரின் பாடல் இடம் பெற்றுள்ளது. இதுவரை இந்த ட்ரெய்லர் 11 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

‘தி பேட்மேன்’ படம் குறித்து மேட் ரீவ்ஸ் கூறியுள்ளதாவது:

''இந்தப் படம் பேட்மேனின் ஆரம்பக் காலம் பற்றிப் பேசுகிறது. பேட்மேனாக மாறுவது என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. இது ஒரு குற்றவியல் பரிசோதனை. கோதம் நகரை மாற்றுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை அவட் முயன்று பார்க்கிறார். தான் விரும்பும் எந்த ஒரு விளைவும் தனக்குக் கிடைப்பதில்லை என்பதை அவர் தெரிந்துகொள்கிறார். அப்போதுதான் கொலைகள் நடக்கத் தொடங்குகின்றன. அவை ஒரு புதிய குற்ற உலகத்தைத் திறந்து விடுகின்றன.

இது ஒரு மர்மம் நிறைந்த துப்பறியும் கதை. இதில் நிச்சயமாக ஆக்‌ஷன் காட்சிகள் உண்டு. இப்படம் வளர்ந்து வரும் பேட்மேனைப் பற்றியது. அவர் இன்னும் நம்பிக்கையின் அடையாளமாக மாறவில்லை. அவரை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது அவர் எதிர்கொள்ள வேண்டிய சவால்''.

இவ்வாறு மேட் ரீவ்ஸ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT