'வொண்டர் வுமன் 1984' திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடவே முனைப்புடன் இருப்பதாக அதன் இயக்குநர் பேடி ஜென்கின்ஸ் கூறியுள்ளார்.
"பெரிய திரையில் பார்க்க அற்புதமாக இருக்கும். பிரம்மாண்டமான காட்சி அனுபவத்தை ரசிகர்களுக்குத் தர வேண்டும் என்று தான் நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். எனவே திரையரங்கில் வெளியிடுவதில் உறுதியாக இருக்கிறோம். இன்று நீங்கள் பார்க்கப்போகும் (ட்ரெய்லர்) காட்சிகள் குறித்து நான் ஆவலாக இருக்கிறேன். படம் விரைவில் வெளியாக வேண்டும் என்று காத்திருக்கிறேன்" என்று பேடி ஜென்கின்ஸ் கூறியுள்ளார்.
டிசி காமிக்ஸின் அடுத்த தயாரிப்புகள் பற்றிய அறிவிப்புகள், முன்னோட்டங்கள் இணையம் வழியாக நடந்த 'டிசி ஃபேன்டோம்' என்ற பொது நிகழ்ச்சியில் சனிக்கிழமை அன்று ரசிகர்களுடன் பகிரப்பட்டன. இதில் கோவிட் நெருக்கடியால் வெளியீடு தாமதமாகியுள்ள 'வொண்டர் வுமன் 1984' திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதில் படத்தின் பிரதான எதிர்மறை கதாபாத்திரமான சீட்டாவின் தோற்றம் முதல் முறையாகக் காட்டப்பட்டது.
இந்தப் படத்தில் நாயகி கால் கடாட்டுடன் க்றிஸ் பைன், பெட்ரோ பாஸ்கல் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நாயகியின் பொறாமை கொண்ட தோழியாக இருந்து பின்பு சூப்பர்வில்லனாக உருமாறும் சீட்டா கதாபாத்திரத்தில் கேர்ஸ்டன் விக் நடித்துள்ளார்.
ஜூன் மாதம் வெளியாகவிருந்த 'வொண்டர் வுமன் 1984', அக்டோபர் 2, 2020 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.