ஹாலிவுட்

தனிமையில் 60-வது பிறந்த நாள்: ‘ஜோரோ’ நடிகருக்குக் கரோனா பாதிப்பு

செய்திப்பிரிவு

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்டோனியோ பாண்டெரஸ் தனது 60-வது பிறந்த நாள் தினத்தில் தனக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

‘மாஸ்க் ஆஃப் ஜோரோ’ படத்தில் ஜோரோ கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்புற்றவர் ஆண்டோனியோ பாண்டெரஸ். ஹாலிவுட், ஸ்பானிஷ் படங்களில் இதுவரை 100க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (ஆக்ஸ்ட் 10) ஆண்டோனியோ தனது 60-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

''நான் இன்று ஒரு விஷயத்தைப் பொதுவில் கூற விரும்புகிறேன். எனக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் என்னுடைய 60-வது பிறந்த நாள் தினத்தை தனிமையில் கொண்டாடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளேன். நான் நலமாக இருக்கிறேன்.

வழக்கத்தை விட சற்று சோர்வு அதிகமாக உள்ளது. மருத்துவ அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலம் விரைவில் உலக மக்களில் பெரும்பாலோனோரைப் பாதித்துக் கொண்டிருக்கும் இந்தத் தொற்றிலிருந்து மீண்டுவிடுவேன் என்று நம்புகிறேன்.

இந்த தனிமைக் காலத்தில் படிப்பது, எழுதுவது, ஓய்வு, என்னுடைய இந்த 60 ஆண்டு காலத்துக்கு அர்த்தம் கொடுக்கும் வகையில் திட்டமிடுவது போன்ற பயனுள்ள விஷயங்களில் கவனம் செலுத்தவுள்ளேன். விரைவில் மிகுந்த உற்சாகத்தோடு திரும்பி வருவேன்''.

இவ்வாறு ஆண்டோனியோ கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT