கியானு ரீவ்ஸ் நடிப்பில் இதுவரை மூன்று பாகங்களாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'ஜான் விக்' வரிசையில் மேலும் இரண்டு படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மூன்று 'ஜான் விக்' திரைப்படங்களும் சேர்ந்து மொத்தமாக 579 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாகவும் இந்தப் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
4-ம் பாகத்துக்கான அறிவிப்பு ஏற்கெனவே வந்திருந்த நிலையில் தற்போது 5-ம் பாகமும் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான லயன்ஸ்கேட் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இரண்டு பாகங்களின் படப்பிடிப்பு அடுத்தடுத்து நடைபெறும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றிப் பேசிய லயன்ஸ்கேட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜான் ஃபெல்திமர், "மே 27, 2022 ஆம் ஆண்டு 'ஜான் விக் 4' வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், கியானு ரீவ்ஸ் தேதிகள் ஒதுக்கியவுடன் 4 மற்றும் 5-ம் பாகங்களின் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
கரோனா நெருக்கடி காரணமாகப் படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள் என அனைத்துக்குமே தடை விதிக்கப்பட்டு திரைத்துறையே முடங்கிய நிலையில், 'ஜான் விக்' திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. கியானு ரீவ்ஸ் தற்போது பெர்லின் நகரில் 'மேட்ரிக்ஸ் 4' திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.