‘தி மேட்ரிக்ஸ்’, ‘ஸ்பீட்’ 'ஜான் விக்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கேயானு ரீவ்ஸ். தற்போது ‘மேட்ரிக்ஸ்’ நான்காம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது காமிக்ஸ் எழுத்தாளராகவும் களமிறங்கியுள்ளார் ரீவ்ஸ். பூம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் BRZRKR என்னும் காமிக்ஸை மேட் கிண்ட், ஓவியக் கலைஞர் அலெஸ்ஸாண்ட்ரோ விட்டி, கலரிஸ்ட் பில் க்ராப்டீ ஆகியோருடன் இணைந்து ரீவ்ஸ் உருவாக்கவுள்ளார்.
பல நூற்றாண்டுகளாக நீண்ட ஆயுளுடன் வாழும் ஒரு போர் வீரனை பற்றிய ரத்தம் தோய்ந்த கதையை பற்றி பேசுகிறது இந்த காமிக்ஸ். தன்னை பற்றிய ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக அமெரிக்க அரசுக்கு உதவுகிறார் அந்த வீரன். காமிக்ஸின் நாயகனுக்கு கேயானு ரீவ்ஸ் போன்ற தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கேயானு ரீவ்ஸ் கூறியுள்ளதாவது:
சிறுவயது முதலே எனக்கு காமிக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சினிமாவுக்குள் நுழைய அவைதான் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்தன. BRZRKR காமிக்ஸை உருவாக்கும் பணிகளில் இத்துறையின் மிகப்பெரிய ஆளுமைகளான பூம் ஸ்டூடியோஸ், மேட் கிண்ட், அலெஸ்ஸாண்ட்ரோ விட்டி போன்றோருடன் இணைவதன் மூலம் என் கனவு நன்வாகியுள்ளது.
இவ்வாறு ரீவ்ஸ் கூறியுள்ளார்.
BRZRKR காமிக்ஸ் வரும் அக்டோபர் மாதம் அமெரிக்காவில் வெளியாகிறது.