ஹாலிவுட்

திருநம்பியாக நடிக்கப் போவதில்லை!- மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட நடிகை ஹாலி பெர்ரி

செய்திப்பிரிவு

தனது அடுத்த படத்தில் திருநம்பியாக நடிக்கத் திட்டமிட்டிருந்த ஹாலிவுட் நடிகை ஹாலி பெர்ரி, மூன்றாம் பாலினத்தவர்களிடமிருந்து எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக அறிவித்துள்ளார்.

‘எக்ஸ்-மென்’ படங்கள் மூலம் உலகம் முழுக்கப் பிரபலமானவர் நடிகை ஹாலி பெர்ரி. சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் சிகை அலங்கார வல்லுநர் க்ரிஸ்டின் ப்ரௌனுடன் நேரலையில் கலந்துரையாடினார். அப்போது, அடுத்த படத்தில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவராக நடிக்கவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

“பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறும் பெண்ணைப் பற்றிய கதாபாத்திரம் இது. இந்தப் பெண் கதாபாத்திரம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அநேகமாக நான் நடிக்கும் அடுத்த படம் அதுவாகத்தான் இருக்கும்” என்றார் ஹாலி. ஆனால், மூன்றாம் பாலினத்தவரை ‘பெண்’ என்று அடையாளப்படுத்துவது என்பது சரியில்லை என்று உலகம் முழுக்க இருக்கும் எல்ஜிபிடி சமூகத்தைச் சார்ந்தவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதையடுத்துச் சுதாரித்துக்கொண்ட ஹாலி, “நான் மூன்றாம் பாலினத்தவர் வேடத்தில் நடிக்கப் போவதில்லை. அந்த யோசனையைக் கைவிட்டுவிட்டேன்” என்று சமூக வலைதளத்தின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். மேலும், மூன்றாம் பாலித்தவரைப் பெண் என்று குறிப்பிட்டதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ஸ்கார்லட் ஜான்சன், டாண்டே ‘டெக்ஸ்’ கில் என்ற பெயரில் அமெரிக்காவைக் கலக்கிய கேங்ஸ்டர் திருநம்பியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ரப் & டக்’ திரைப்படத்தில் நடிக்கவிருந்தார். எல்ஜிபிடி சமூகத்தினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தப் படத்திலிருந்து அவர் வெளியேறினார்.

தற்போது, மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றிய கதைகளில் மூன்றாம் பாலினத்தவர்களே நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுப்பப்பட்டுள்ளது.

1970-களின் ஆரம்பத்தில் ஹாலிவுட் படங்களில் அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்திய மக்களைப் பற்றிய படங்களில் நடிக்க செவ்விந்தியர்களுக்கு வாய்ப்பளிக்காமல் வெள்ளையர்களே நடித்ததை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடந்ததை இது நினைவூட்டுகிறது. செவ்விந்திய நடிகர்களுக்கு ஆதரவாக, ‘தி காட் ஃபாதர்’ திரைப்படத்துக்காகத் தனக்குக் கிடைத்த ஆஸ்கர் விருதைப் புறக்கணித்தார் மார்லன் பிராண்டோ.

மேலும், தன் சார்பாக சாஷீன் லிட்டில்ஃபெதர் என்ற செவ்விந்திய நடிகையை ஆஸ்கர் விருது விழாவுக்கு அனுப்பி தனது கண்டனங்களை அவர் வாயிலாகப் பதிவு செய்தார். இன்று செவ்விந்திய வம்சாவளி நடிகர்கள் ஹாலிவுட்டில் நீடித்திருப்பதற்கு இதுபோன்ற போராட்டங்களும், தியாகங்களும்தான் பின்புலமாக இருக்கின்றன. இதே நிலையை நாளை மூன்றாம் பாலினத்தவர்களும் அடைய வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோள்.

- க.விக்னேஷ்வரன்

SCROLL FOR NEXT