பிரபல இசையமைப்பாளர் எனியோ மோரிகோனே காலமானார். அவருக்கு வயது 91.
ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் எனியோ மோரிகோனே. இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவர் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படைப்புகளுக்கு இசையமைத்துள்ளார்.
திங்கள் அன்று காலை, ரோம் மருத்துவமனையில் மோரிகோனே காலமானார். இதை அவரது வழக்கறிஞர் உறுதி செய்தார். முன்னதாக மோரிகோனே தனது இல்லத்தில் கீழே விழுந்து காலை முறித்துக் கொண்டார். இதன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
'தி குட்', 'தி பேட் அண்ட் தி அக்லி', 'தி அன்டச்சபிள்ஸ்' என 1950-களில் இசையமைக்க ஆரம்பித்த மோரிகோனே, திரைப்பட வரலாற்றில் அதி முக்கியமான பல படைப்புகளுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசைக் கோர்ப்புகளுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உலகம் முழுவதிலும் உள்ளது. குறிப்பாக 'தி குட்', 'தி பேட் அண்ட் தி அக்லி' படத்துக்கான இவரது இசை இன்றளவும் நினைவுகூரப்படுகிறது. பலரால் பிரதி எடுக்கப்பட்டுள்ளது.
2007-ம் வருடம், வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருதும், 2016-ம் ஆண்டு, க்வெண்டின் டாரண்டினோவின் 'ஹேட்ஃபுல் எய்ட்' திரைப்படத்தின் பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதையும் மோரிகோனே பெற்றுள்ளார்.