‘தி ஃபால்ட் இன் ஆர் ஸ்டார்ஸ்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானவர் ஆன்செல் எல்கார்ட். 'பேபி டிரைவர்’ படத்துக்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.
தற்போது இவர் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் தளத்தில் கேபி என்ற பெயரில் ஒரு பெண் ஆன்செல் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது குறித்து நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
2014ஆம் ஆண்டு எனது 17வது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு நான் ஆன்செல் எல்கார்ட்டால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அப்போது அவருக்கு வயது 20. நான் வேதனை தாங்கமுடியாமல் அழுது கொண்டிருந்தேன்.
இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவு ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியது. ட்விட்டரில் ஆன்செல்லுக்கு எதிராக ஹாஷ்டேகுகள் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில் ஆன்செல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தான் யாரையும் இதுவரை துன்புறுத்தியதில்லை என்றும் அப்போது இருவரும் காதலித்து வந்ததாகவும், இது இருவரது விருப்பத்துடன் தான் நடந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது கேபியின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டுள்ளது.
டிஸ்னி தயாரிப்பில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிவரும் ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ படத்தில் ஆன்செல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.