ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் அடுத்த படமான 'நோ டைம் டு டை'யை அமெரிக்கத் திரையரங்குகளில் ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் நவம்பர் 25-ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 20-ம் தேதி அமெரிக்கா உட்பட உலகின் மற்ற நாடுகளிலும் வெளியாகிறது. ஜேம்ஸ் பாண்ட் திரை வரிசையின் அதிகாரபூர்வ பக்கத்தில் தயாரிப்பாளர்கள் இந்தத் தகவலை அறிவித்துள்ளனர். பிரிட்டனில் நவம்பர் 12-ம் தேதி இப்படம் வெளியாகிறது.
முன்னதாக, வார்னர் பிரதர்ஸ் தரப்பு, தங்களின் 'காட்ஸில்லா வெர்சஸ் காங்' திரைப்பட வெளியீட்டை மே 21, 2021-க்கு தள்ளிவைத்தது. இதைத் தொடர்ந்தே 'நோ டைம் டு டை' படத்தை ஐந்து நாட்கள் முன்னதாக வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் டேனியல் க்ரைக் ஐந்தாவது மற்றும் கடைசி முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் இது. ஏப்ரல் வெளியீடாகத் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம் கரோனா நெருக்கடி காரணமாக நவம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கேரி ஜோஜி ஃபூகுநாகா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.