'மிஷன் இம்பாஸிபில் 7' திரைப்படத்தின் படப்பிடிப்புக் குழுவினர் தங்குவதற்காக கரோனா இல்லாத ஒரு கிராமத்தை உருவாக நடிகர் டாம் க்ரூஸ் முடிவு செய்துள்ளார். இதன் மூலம், கரோனா அச்சுறுத்தலின்றி படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார்.
கரோனா நெருக்கடி காரணமாக சர்வதேச அளவில் அனைத்து நாடுகளின் பொழுதுபோக்குத் துறையும் ஸ்தம்பித்துள்ளன. ஹாலிவுட்டும் இதிலிருந்து தப்பவில்லை. வெனிஸ் நகரில் நடந்து கொண்டிருந்த 'மிஷன் இம்பாஸிபில் 7'-ம் பாகத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டனுக்கு மாற்றப்பட்டது. மேலும் படப்பிடிப்பும் முடங்கியுள்ளது.
எனவே பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்ட்ஷையர் மாகாணத்தில் இருக்கும் ராயல் விமானப் படையின் முன்னாள் தளத்தை தற்காலிக கிராமமாக மாற்ற டாம் க்ரூஸ் திட்டமிட்டுள்ளார். இங்கு டாம் க்ரூஸ், தயாரிப்பாளர் மற்றும் முன்னணி நடிகர்கள் விஐபிகளுக்கான கேரவேனில் தங்கவுள்ளதாகவும் தெரிகிறது.
இதுபற்றி கூறிய படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் "ஏற்கனவே படம் அதிகமாகத் தாமதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது சகஜ நிலை திரும்பும் என்பது தெரியவில்லை. எனவே வேலையை வேகமாக, பாதுகாப்பாகத் தொடங்க இது ஒரு முயற்சி. மேலும் ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் எங்கும் அறை கிடைக்காது. எனவே ஒன்று இந்த முயற்சி அல்லது இன்னும் கூடுதல் காலம் காத்திருக்க வேண்டும் என்பதே கண் முன் இருக்கும் தேர்வுகள்.
இது அதிக செலவு பிடிக்கும் யோசனை தான். ஆனால் டாம் க்ரூஸ் எப்போதுமே பிரம்மாண்டமாக யோசிப்பவர், செயல்படுத்துபவர். இந்தப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 'மிஷன் இம்பாஸ்பில்' படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றவை. எனவே இந்த யோசனைக்கு ஸ்டூடியோவின் ஆதரவும் உள்ளது" என்றார்.
முன்னதாக ஜூலை 23, 2021 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படம், பல்வேறு தாமதங்களால் நவம்பர் 19, 2021 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது