பிரபல வெப் சீரிஸான 'ஹாண்ட்மெய்ட்ஸ் டேல்' படப்பிடிப்பைத் தொடங்க அந்தக் குழுவினர் ஆவலுடன் இருப்பதாகவும், ஆனால் தற்போது இருக்கும் கரோனா நெருக்கடியில் எல்லோருக்கும் பாதுகாப்பான வழி எது என்பதை இன்னும் திட்டமிட்டு வருவதாகவும் நடிகை எலிஸபெத் மாஸ் கூறியுள்ளார்.
முதல் சீஸனிலேயே 8 ப்ரைம்டைம் எம்மி விருதுகளை வென்றது 'ஹாண்ட்மெய்ட்ஸ் டேல்'. மேலும், இந்தத் தொடருக்கும், இதில் நடித்து வரும் நடிகை எலிஸபெத் மாஸுக்கும் கோல்டன் க்ளோப் விருதுகளும் கிடைத்தன. இதுவரை மூன்று சீஸன்கள் ஸ்ட்ரீமிங்கில் வெளியாகியுள்ளன.
1985-ல் இதே பெயரில் வெளியான நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது இந்தத் தொடர். எதிர்காலத்தில் ஒரு கற்பனையான நாட்டில் நடக்கும் இந்தக் கதையில் கொடூரமான ஆட்சியின் கீழ் பெண்களுக்கு அனைத்து விதமான உரிமைகளும் பறிக்கப்பட்டு, அவர்கள் குழந்தைகளைப் பெற்றுத் தரும் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.
நான்காவது சீஸனுக்கான படப்பிடிப்பு கரோனா நெருக்கடியால் தடைப்பட்டுள்ளது. இதற்கான திரைக்கதையை, கதாசிரியர்கள் அவர்கள் வீட்டிலிருந்தே எழுதி வருகிறார்கள்.
இதுகுறித்துப் பேசிய நடிகை எலிஸபெத் மாஸ், "நாங்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும். ஏனென்றால் குடும்பத்துக்கு உதவ வேண்டும். பலர் வாடகை கட்ட வேண்டும். அதே நேரத்தில் எந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் விட மனித உயிர் மதிப்புமிக்கது. அனைவருக்கும் பாதுகாப்பான முறையில் எப்படிப் படப்பிடிப்பை நடத்துவது என்று இன்னும் யோசித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.