ஹாலிவுட்

சிறையில் இருக்கும் ஹார்வீ வெய்ன்ஸ்டீன் மீது புதிதாக நான்கு பாலியல் புகார்கள்

செய்திப்பிரிவு

'தி ஆர்டிஸ்ட்', 'தி இமிடேஷன் கேம்', 'ஜாங்கோ அன்செயிண்ட்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த வெயின்ஸ்டீன் கம்பெனியின் துணை நிறுவனர் ஹார்வீ வெயின்ஸ்டீன். இவர் ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்தார். இவர் படப்பிடிப்பின்போது நடிகைகளுக்குப் பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கூறப்பட்டது.

நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ரோஸ் மெக்கவுன், க்வெனித் பேல்ட்ரோ, உமா துர்மேன் உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட நடிகைகள் ஹார்வீயால் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாகக் குற்றம் சாட்டி வந்தனர்.

ஹார்வீ வெய்ன்ஸ்டீனுக்கு எதிராகப் பாலியல் புகார் தெரிவித்தவர் நடிகை ரோஸ் மெகாவென். அவருக்கு ஆதரவாக, அவரது தோழியும் நடிகையுமான அலிஸா மிலானோ 2017-ம் ஆண்டு ‘மீ டூ’ எனும் ஹேஷ்டேகை உருவாக்கினார். அது பின்னாட்களில் ஓர் இணைய இயக்கமாக உருவெடுத்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்குப் பிறகு, மன்ஹாட்டன் கிரிமினல் நீதிமன்றம் ஹார்வீக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் சிறையில் இருக்கும் ஹார்வீ வெயின்ஸ்டீன் மீது மீண்டும் நான்கு பாலியல் புகார்கள் புதிதாக வந்துள்ளன.

இவை 1984ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதில் ஒரு பெண் 1994ஆம் ஆண்டு தனக்கு 17 வயது இருக்கும்போது ஹார்வீ தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2013ஆம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவின் போது ஹார்வீ தன்னை அடைத்து வைத்து தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தனது புகாரில் கூறியுள்ளார்.

தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகளால ஹார்வீ வெயின்ஸ்டீனின் தண்டனைக் காலம் அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT