காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலகின் முன்னணி இசைக் கலைஞர்களுடன் இணைகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
உலகம் முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதுமுள்ள இசைக் கலைஞர்கள் இணைந்து ‘ஹேண்ட்ஸ் அரவுண்ட் தி வேர்ல்ட்’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கவுள்ளனர். 50ஆம் ஆண்டு உலக பூமி தினத்தை முன்னிட்டு நேற்று (22.04.2020) இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இதில் உலகின் முன்னணி இசைக்கலைஞர்களுடன் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைகிறார். அவரோடு நடாஷா பெடிங்ஃபீல்ட், கோடி சிம்ப்ஸன், ஓபரா பாடகர் ஜானதன் சிலியா ஃபரோ, எரிகா அட்கின்ஸ் உள்ளிட்ட பலரும் இணைந்து பாடவுள்ளனர்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பதாவது:
இசையையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி நாங்கள் செய்யும் இந்த முன்னெடுப்பு அதிகமான மக்களை சென்றடையும் என்று நம்புகிறேன். உலகம் முழுவதுமுள்ள அற்புதமான இசைக் கலைஞர்களுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இப்பாடல் உருவாக்கப்படவுள்ளது. இப்பாடலுக்காக வரிகளை ஸ்டீஃபன் ஸ்குவார்ட்ஸ் எழுதியுள்ளார்.