ஹாலிவுட்

வளரும் நெட்ஃபிளிக்ஸ்: 1.58 கோடி புதிய சந்தாதாரர்கள், 5.7 பில்லியன் வருமானம்

ஐஏஎன்எஸ்

ஸ்ட்ரீமிங் சேவையான நெட்ஃபிளிக்ஸ், 2020 முதல் காலாண்டில் புதிதாக 1.58 கோடி சந்தாதாரர்களையும், 5.77 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்தையும் பெற்றுள்ளது. இது கடந்த வருடம் இதே காலகட்டத்தை விட 22 சதவீதம் அதிகமாகும்.

மொத்தமாக தற்போது நெட்ஃபிளிக்ஸில் 182 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். மேலும் அமெரிக்காவின் பங்குச்சந்தையில், தற்போதைய கரோனா நெருக்கடி, அமெரிக்க டாலர் மதிப்பும் ஸ்திரமில்லாத நிலைமையைத் தாண்டி நெட்ஃபிளிக்ஸின் பங்கு மதிப்பு 3.3. சதவீதம் அதிகரித்துள்ளது. மற்ற ஸ்ட்ரீமிங் சேவைகளைப் போலவே நெட்ஃபிளிக்ஸிலும், இந்த கரோனா காலத்தில், பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர்.

"எங்களது நிறுவனத்தின் 20+ வருட வரலாற்றில் இது போன்ற ஒரு நிச்சயமற்ற சூழலை நாங்கள் பார்த்ததில்லை. கரோனா கிருமி உலகின் எல்லா மூலையிலும் பரவியுள்ளது. அதற்கான ஒரு சிகிச்சை, தடுப்பு மருந்து இல்லாத நிலையில், இந்த மோசமான நெருக்கடி எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியாது. பல லட்சம் மக்கள் வேலையிழந்துள்ளனர்.

இப்படி ஒரு நேரத்தில், வீட்டில் முடங்கியிருக்கும் மக்களுக்கு என ஒரு அர்த்தமுள்ள சேவை தர முடிவது அதிர்ஷ்டம் என்பது எங்களுக்குத் தெரியும். அதை எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்க முடியும். எங்களது தயாரிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள அதே நேரத்தில், ஏற்கனவே நாங்கள் முடித்து வரிசைப்படுத்தியுள்ள படைப்புகள் மூலம் எங்களுக்கு ஆதாயம் கிடைத்துள்ளது. என்னதான் எங்களது தயாரிப்புகள் தற்போது ரத்தாகியிருந்தாலும், மக்களுக்கு 2020 முழுவதும், 2021லும் அற்புதமான புதிய படைப்புகளை எங்களால் தொடர்ந்து தர முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த நெருக்கடி நேரத்தால் மூன்று முக்கிய விளைவுகள் எங்கள் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ளன. . ஒன்று, மக்கள் வீட்டிலேயே இருப்பதால் எங்கள் சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரண்டு, எங்களது சர்வதேச வருவாய் என்பது முன்னால் கணிக்கப்பட்டதை விட குறைவாக இருக்கும், இதற்கு டாலர் மதிப்பு ஒரு காரணம். மூன்று, தயாரிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக எங்கள் செலவினங்கள் தாமதமாகியுள்ளன. அதன் மூலம் பணப்புழக்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சில படைப்புகளின் வெளியீடு குறைந்தது ஒரு காலாண்டு வரை தள்ளிப்போகும்".

இவ்வாறு நெட்ஃபிளிக்ஸின் காலாண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT