ஹாலிவுட்

கரோனா தொற்று: 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி', 'சூஸைட் ஸ்க்வாட்' வெளியீட்டுத் தேதிகள் மாறாது

செய்திப்பிரிவு

இயக்குநர் ஜேம்ஸ் கன், தனது இயக்கத்தில் உருவாகி வரும் 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸ் 3' மற்றும் 'தி சூஸைட் ஸ்க்வாட்' ஆகிய படங்களின் வெளியீடு, தற்போது நிலவி வரும் கரோனா தொற்று பிரச்சினையால் தள்ளிப்போகாது என்று கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியால் ஹாலிவுட் திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட் சிறிய பட்ஜெட் என பலப் படங்களின் வெளியீடுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான பெரிய படங்கள் அடுத்த வருடம் வெளியாகும் என்று தேதி அறிவிக்கப்பட்டுவிட்டன. இதனால் அடுத்த வருடம் வெளியாகவுள்ள படங்களின் தேதிகளும் மாறி வருகின்றன.

இயக்குநர் ஜேம்ஸ் கன், தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடனான உரையாடலின்போது, இதுபற்றிய கேள்விக்கு பதில் கூறுகையில், "இப்போதைக்கு 'சூஸைட் ஸ்க்வாட்' வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்படக் காரணங்கள் இல்லை. நாங்கள் திட்டமிட்டபடியே, அதை விட அதிகமான வேலைகளையே முடித்துள்ளோம். தனிமைப்படுத்தல், சமூக விலகலுக்கு முன்னரே படப்பிடிப்பை முடித்து எங்கள் வீடுகளிலிருந்தே எடிட்டிங் உள்ளிட்ட வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது எங்கள் அதிர்ஷ்டமே.

அதேபோல 'கார்டியன்ஸ் ஆஃப் தி காலக்ஸி 3'-ம் பாகத்தின் திட்டமும் கரோனா பிரச்சினைக்கு முன்பாக எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். எனவே ஆகஸ்ட் 6, 2021 அன்று திட்டமிட்டபடி 'சூஸைட் ஸ்க்வாட்' வெளியாகும் என்று தெரிகிறது.

மார்வல் - டிஸ்னி தரப்புக்காக 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி'யின் முதல் இரண்டு பாகங்களை இயக்கினார் ஜேம்ஸ் கன். இரண்டு பாகங்களும் வசூல், விமர்சனம் என இரண்டு ரீதியிலும் வரவேற்பைப் பெற்றன. ஆனால் ஜேம்ஸ் கன் பல வருடங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பகிர்ந்ததாக இணையத்தில் பலர் அவரைக் குற்றம் சாட்ட, வேறு வழியின்றி அவரை இயக்குநர் பொறுப்பிலிருந்து டிஸ்னி நீக்கியது.

இந்த நேரத்தில், மார்வல் சூப்பர் ஹீரோ படங்களின் போட்டியாகப் பார்க்கப்படும் டிசி சூப்பர் ஹீரோ படங்களை தயாரிக்கும் வார்னர் ப்ராஸ் நிறுவனம், ஜேம்ஸ் கன்னை ஒப்பந்தம் செய்தது. 2016-ல் வெளியான் 'சூஸைட் ஸ்க்வாட்' படத்தின் அடுத்த பாகத்தை இயக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்தது.

ஆனால் ரசிகர்கள், நடிகர்கள் என பலரது வேண்டுகோளை ஏற்று ஜேம்ஸ் கன்னை மீண்டும் டிஸ்னி ஒப்பந்தம் செய்தது. ஆனால் 'சூஸைட் ஸ்க்வாட்' படத்துக்கான வேலைகளை முடித்த பின்னரே 'கார்டியன்ஸ்' மூன்றாம் பாக வேலைகளை ஆரம்பிப்பேன் என ஜேம்ஸ் கன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT