ராபின் ஹுட் அனிமேஷன் படத்தை லைவ் ஆக்ஷன் வடிவில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளது அதன் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி.
கார்ட்டூன் படமான 'ஜங்கிள் புக்'கை லைவ் ஆக்ஷன் வடிவில் மறு ஆக்கம் செய்து பெரும் வெற்றி கண்ட டிஸ்னி நிறுவனம், 'தி லயன் கிங்' படத்தையும் தத்ரூப அனிமேஷன் முறையில் எடுத்து வெற்றி கண்டது. தொடர்ந்து தனது பிரபலமான பல்வேறு அனிமேஷன் திரைப்படங்களை லைவ் ஆக்ஷன் படங்களாக ரீமேக் செய்ய முழுவீச்சில் இறங்கியுள்ளது டிஸ்னி.
இந்த வரிசையில் தற்போது 1973 ஆம் ஆண்டு வெளியான 'ராபின் ஹுட்' அனிமேஷன் திரைப்படத்தை 'ஜங்கிள் புக்' எடுத்தது போல தத்ரூப அனிமேஷன் முறையில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளது. ஆனால், இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாது. மாறாக டிஸ்னி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் சேவையில் நேரடியாக வெளியாகும். 73-ல் வெளியான அனிமேஷன் படம், புகழ்பெற்ற ராபின் ஹுட் கதையை நகைச்சுவையும், பாடல்களும் கலந்து, மிருகங்களைக் கதாபாத்திரங்களாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.
'ப்ளைண்ட்ஸ்பாட்டிங்' படத்தின் இயக்குநர் கார்லோஸ் லோபெஸ் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். ஏற்கெனவே டிஸ்னிக்கு 'லேடி அண்ட் தி ட்ராம்ப்' படத்துக்கான திரைக்கதையை எழுதிய கேரி க்ரான்லண்ட், இந்தப் படத்துக்கான திரைக்கதையை எழுதவுள்ளார்.
'லேடி அண்ட் தி ட்ராம்ப்' திரைப்படமும் கடந்த டிசம்பர் மாதம், திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் சேவையில் மட்டும் வெளியானது நினைவுகூரத்தக்கது. கடந்த வாரம் டிஸ்னி ப்ள்ஸ் சேவை இந்தியாவில் அறிமுகமானது. உலக அளவில் டிஸ்னி+ சேவைக்குச் சந்தா கட்டியிருப்பவர்கள் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டியுள்ளதாக டிஸ்னி அறிவித்துள்ளது.
கரோனா பிரச்சினை முடிந்த பிறகு 'ராபின் ஹுட்' படத்தின் வேலைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.