கரோனா தொற்றுக் கட்டுப்பாடால் ஊரடங்கு தொடர்ந்தால் கான்ஸ் திரைப்பட விழா டிஜிட்டலில் நடக்காது என உறுதி செய்துள்ளார் விழாவின் இயக்குநர் திரீ ஃப்ரிமோ உறுதி செய்துள்ளார்.
சர்வதேச அளவில் கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு, சமூக விலகல் ஆகியவைக் அமலில் இருப்பதால் மக்கள் அதிக அளவில் கூடும் பொது நிகழ்ச்சிகளும் ரத்தாகியுள்ளன. மறு தேதி குறிப்பிடப்படாமல் சில நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உலக சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான, அனைத்து சினிமா கலைஞர்களின் கனவாகப் பார்க்கப்படும் கான்ஸ் திரைப்பட விழாவும் இதில் அடக்கம்.
ஒரு வேளை ஊரடங்கு தொடர்ந்தால் கான்ஸ் விழா டிஜிட்டல் விழாவாகவே நடக்கும் என்று சிலர் கூறி வந்தனர். ஆனால் அதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் விழாவின் இயக்குநர் திரீ ஃப்ரிமோ .
"கான்ஸை பொருத்த வரை அது ஒரு வரலாறு, அதன் தாக்கம், அந்த வடிவம் டிஜிட்டலில் உதவாது. அதென்ன டிஜிட்டல் திரைப்பட விழா? டிஜிட்டலில் போட்டியா? முதலில் உரிமையாளர்கள் ஒப்புக்கொள்வார்களா என்று பார்க்க வேண்டும். வெஸ் ஆண்டர்சன், பால் வெர்ஹோவன் படங்கள் கணினித் திரையிலா? 'டாப் கன் 2', 'பிக்ஸாரின் ஸோல்' ஆகியவை திரையரங்கைத் தவிர வேறெங்கோ பார்க்கப்படுமா? இவை பெரிய அரங்கில் திரையிடப்பட வேண்டும் என்று தான் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதை ஏன் முன்னதாக ஒரு டிஜிட்டல் சாதனத்தில் காட்ட வேண்டும்?
இயக்குநர்கள் அவர்கள் படங்கள் பெரிய திரையில் காட்டப்பட வேண்டும் என்ற ஆசையில் தான் இயங்குகிறார்கள். திரை விழாக்கள் போன்ற நிகழ்வுகளில் மக்களுடன் பகிர விரும்புகிறார்கள். ஐஃபோன் திரையில் காட்ட அல்ல. அனைத்து திரைவிழாக்களும் ரத்து செய்யப்பட்டால் ஒரு வருடத்தை வீணடிக்காமல் இருக்க, படங்களைத் திரையிட வேறு வழிகளை யோசிக்க வேண்டும்" என்று ஃப்ரிமோ கூறியுள்ளார்.
இந்த திரைப்பட விழா ஏற்பாட்டில் ஃபிரெஞ்ச் சினிமா விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பங்கெடுப்பார்கள். கரோனாவால்ல் ஃபிரான்ஸில் மூன்று வார ஊரடங்கு அமலிலிருந்தாலும் படங்கள் தேர்வு நடந்து வருவதாகவும், அதே நேரத்தில் இந்த தொற்றின் தீவிரத்தை வைத்தும் திட்டமிட்டு வருவதாகவும் ஃப்ரிமோ தெரிவித்துள்ளார்.
மேலும் ஃப்ரெஞ்ச் கலாச்சாரத் துறை அமைச்சரும், நகரத்தின் மேயரும் கான்ஸ் திரை விழாவுக்கு தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். எனவே கரோனா பிரச்சினைக்குப் பிறகு கான்ஸ் இந்த வருடம் எப்போது திட்டமிடப்பட்டாலும் அதற்கான உதவிகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.