கூடிய விரைவில் கரோனாவுக்குப் பலனளிக்கக்கூடிய மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று ஜாக்கி சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சான் நேற்று (ஏப்ரல் 7) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர். ஆனால், கரோனா அச்சத்தால் ஜாக்கி சான் யாருக்குமே பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 8) காலை பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் பதிலளிக்கும் விதமாகத் தனது ட்விட்டர் பதிவில் ஜாக்கி சான் கூறியிருப்பதாவது:
"பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைக் கூற விரும்புகிறேன். எனது பிறந்த நாள் விருப்பமும் உங்களுடையதைப் போலத்தான். கூடிய விரைவில் பலனளிக்கக்கூடிய ஒரு மருந்து, தடுப்பு கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று நம்புகிறேன். உலக அமைதி மற்றும் நல்லிணக்கம் வேண்டும் என வேண்டுகிறேன். பாதுகாப்பாக, ஆரோக்கியத்துடன் இருங்கள்".
இவ்வாறு ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கரோனா தொற்று இருப்பதாக வதந்திகள் பரவியது. இதனைத் தொடர்ந்து தனக்குக் கரோனா தொற்று இல்லை என்று ஜாக்கி சான் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.