நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தினமும் பல நூறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள், விருது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
டாம் ஹாங்க்ஸ், ஓல்கா குரிலென்கோ உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் கரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் உலகப் புகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய ஜே.கே.ரௌலிங் தான் கரோனா அறிகுறிகளால் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவர் ஒருவர் பேசும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள ஜே.கே.ரௌலிங் கூறியுள்ளதாவது:
கரோனா அறிகுறிகளில் இருந்து விடுபடுவது எப்படி என்று குயின்ஸ் மருத்துவமனையிலிருந்து பேசும் இந்த மருத்துவர் சொல்வதை கேளுங்கள். கடந்த இரண்டு வாரங்களாக கோவிட் 19 வைரஸின் அனைத்து அறிகுறிகளும் எனக்கு இருந்தன. நான் எந்த பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை. இந்த மருத்துவரின் அறிவுரையை பின்பற்றினேன். தற்போது முற்றிலுமாக குணமடைந்துள்ளேன். இவர் சொன்ன முறை மிகவும் உதவியது. எந்த பக்க விளைவுகளும் இல்லாத இந்த முறையை உங்கள் அன்புக்குரியவர்களிடம் சொல்லுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு ஜே.கே.ரௌலிங் கூறியுள்ளார்.