'தி ஃப்ளாஷ்' தொடரில் நாயகனின் இளவயதுக் கதாபாத்திரத்தில் நடித்த இளம் நடிகர் லோகன் வில்லியம்ஸ் உயிரிழந்தார். அவருக்கு வயது 16.
வில்லியம்ஸ் உயிரிழந்த செய்தியை உறுதி செய்த அவரது தாய் மார்லைஸ் வில்லியம்ஸ், இந்த துக்கத்தால் குடும்பம் நிலைகுலைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் கரோனா பிரச்சினையால் சமூக விலகல் அமலில் இருப்பதால் தற்போது இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்வதில் சிக்கல் இருப்பதாகவும் கூறியுள்ளார். தங்கள் ஒரே பேரனை இழந்த எனது அப்பா, அம்மாவைக் கூட என்னால் அணைத்து பரஸ்பரம் ஆறுதல் தேட முடியவில்லை என்று மார்லைஸ் கூறியுள்ளார்.
'தி ஃப்ளாஷ்' தொடரின் நாயகன் க்ராண்ட் கஸ்டின், லோகனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "மோசமான செய்தியை இப்போதுதான் கேட்டேன். இந்தப் புகைப்படம் 2014-ஆம் ஆண்டு 'தி ஃப்ளாஷ்' தொடரின் மாதிரி பகுதியைப் படப்பிடிக்கும்போது எடுக்கப்பட்டது. அப்போது லோகனின் திறமை மற்றும் அல்ல அவர் எவ்வளவு தொழில்முறையாக நடந்து கொண்டார் என்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.
நினைத்துப் பார்க்க முடியாத இந்த கடினமான காலகட்டத்தில் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் அவரோடும் அவர் குடும்பத்தோடும் இருக்கும். இந்த வித்தியாசமான, அயர்ச்சியான வேளையில் லோகனையும், அவர் குடும்பத்தையும் உங்கள் எண்ணம் மற்றும் பிரார்த்தனைகளிலும் வைத்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் என் அன்பு" என்று கூறியுள்ளார்
2015 ஆம் ஆண்டு 'தி ஃபிளாஷ்' தொடரின் இரண்டாவது சீசனில் கடைசியாக வில்லியம்ஸ் தோன்றினார்.