பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தொகுத்து, இணைந்து வழங்கும் 16 பகுதிகள் கொண்ட ஸ்டண்ட் அப் காமெடி தொடர் தயாராகிறது. இதற்கு 'திஸ் ஜோகா' என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்தத் தொடரில் வளர்ந்து வரும் மற்றும் புகழ்பெற்ற நகைச்சுவையாளர் இடம் பெறுவர். இதில் ஸ்டண்ட் அப் காமெடி, ஸ்மித்தும் நகைச்சுவையாளரும் பேசும் உரையாடல், திரைக்குப் பின்னால் நடந்த நகைச்சுவையின் ஆவணப் படம் என அனைத்தும் இடம்பெறும்.
பாரன் வான், மேகன் கெய்லி, பங்கி ஜான்சன் உள்ளிட்ட எண்ணற்ற நகைச்சுவையாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். ஜார்ஜ் வாலஸ், ஷான் வாசாபி உள்ளிட்டவர்கள் கௌரவப் பங்கேற்பாளராக இடம்பெறவுள்ளனர்.
வில் ஸ்மித்தின் வெஸ்ட்ப்ரூக் ஸ்டூடியோஸ் மற்றும் டாப்கால்ஃப் எண்டர்டெய்ன்மெண்ட் குழுமம் இணைந்து இந்தத் தொடரைத் தயாரிக்கிறது. டாப்கால்ஃப் குழுமத்தின் லாஸ் வேகாஸ் இடம் இந்த நிகழ்ச்சிக்கான இடங்களில் ஒன்றாக இடம்பெறும்.
"ஸ்டண்ட் அப் காமெடி மீது வில் ஸ்மித்துக்கு அன்பும், மரியாதையும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தத் தொடருடன், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பல்வேறு பின்னணியைச் சேர்ந்த நகைச்சுவைத் திறமைகளைக் கண்டுபிடித்து, அவர்களிடம் நிறையத் தெரிந்து கொள்வோம் என நம்புகிறோம். திஸ் ஜோகா நிகழ்ச்சியின் குறிக்கோள் சிரிக்க வைப்பது மட்டுமல்ல, அந்த சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் பொதுவான மனித உண்மைகளைக் கண்டுபிடிப்பதே" என்று வெஸ்ட்ப்ரூக் ஸ்டூடியோஸின் இணைத் தலைவர் டெரன்ஸ் கார்டர் தெரிவித்துள்ளார்.
க்யூபி என்ற அமெரிக்க மொபைல் ஸ்ட்ரீமிங் சேவையில் இந்தத் தொடர் காணக்கிடைக்கும்.