ஹாலிவுட்

கரோனா அச்சம்: காலவரையின்றி மூடப்பட்ட டிஸ்னி லேண்ட் தீம் பார்க் 

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அமெரிக்காவில் அமைந்துள்ள டிஸ்னி லேண்ட் மற்றும் டிஸ்னி வேர்ல்ட் தீம் பார்க்குகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

நாளுக்கு நாள் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். உலகின் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், திரைப்பட வெளியீடுகள், படப்பிடிப்புகள் ஆகியவை தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் அமைந்துள்ள வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் பிரம்மாண்ட தீம் பார்க்கான ‘டிஸ்னிலேண்ட்’ மற்றும் ‘டிஸ்னி வேர்ல்ட்’ ஆகியவை காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து வால்ட் டிஸ்னி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கோவிட்-19 வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால், எங்கள் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு டிஸ்னி லேண்ட் மற்றும் வால்ட் டிஸ்னி வேர்ல்ட் தீம் பார்க்குகள் மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி மூடப்படுகின்றன''.

அதுமட்டுமல்லாமல் பார்க்குகள் மூடப்பட்டிருக்கும் காலங்களில் ஊழியர்களுக்குச் சம்பளமும் வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT