அமெரிக்க பாப் இசைப் பாடகி ஆரியானா க்ராண்டே தன் ரசிகர்கள் சிலருக்கு ரகசியமாக நிதியுதவி அளித்து வருகிறார்.
கரோனா வைரஸ் தொற்று பிரச்சினையால் ஆரியானா க்ராண்டேவின் ரசிகர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படிப் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி சமூக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்கிறார் ஆரியானா. அவர்களுடன் அதே தளத்தில் உரையாடியும் வருகிறார்.
கட்டணங்கள் கட்ட முடியவில்லை, வேலை இல்லாததால் பணம் இல்லை என்று பதிவிடும் தனது ரசிகர்களுக்கு நேரடியாகப் பணம் அனுப்பி வருகிறார் ஆரியானா. இதுவரை குறைந்தது வேலை இழந்த தனது 10 ரசிகர்களுக்கு ஆரியானா வென்மோ செயலி மூலமாகப் பணம் அனுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களாக 500 அமெரிக்க டாலரிலிருந்து 1500 அமெரிக்க டாலர்கள் வரை ஆரியானா உதவியுள்ளார். அத்தியாவசியத் தேவை இருப்பவர்களாகப் பார்த்து ஆரியானா நன்கொடை அளித்து வருகிறார் என்றும் அமெரிக்க பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் எல்லா ரசிகர்களுக்கும் உதவ முடியாது என்றாலும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பதைப் போல, தனது ட்விட்டர் உரையாடல்களை வைத்து, தேர்ந்தெடுத்து உதவுகிறார். அப்படி சமீபத்தில் கூட, ஏப்ரல் மாதம் வாடகை கட்டக்கூட தன்னிடம் பணம் இல்லை என்று சொன்ன ரசிகர் ஒருவருக்கு உடனடியாக ஆரியானா பணம் அனுப்பியுள்ளார்.