இனவெறிக்கு எதிராக ஒரு படத்தை உருவாக்க விரும்பினேன் என்று இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கூறியுள்ளார்.
1957ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான இசை ஆல்பம் ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’. ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த ஆல்பம். இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இந்த ஆல்பத்தை அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ தான் என் குடும்பத்தினர் எங்கள் வீட்டில் அனுமதித்த முதல் ஆல்பம். ஒரு சிறுவனாக அந்த ஆல்பத்தில் தொலைந்து அதனுடன் காதல் வயப்பட்டேன். இந்த கதை அந்த காலத்துக்கானது மட்டுமல்ல. அந்த காலம் தற்போது மீண்டும் திரும்பியுள்ளதால், இந்த கதையும் சமூக கோபத்தோடு திரும்பியுள்ளது. இனவெறிக்கு எதிராக ஒரு படத்தை உருவாக்க விரும்பினேன். அதனால்தான் ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ இசை ஆல்பத்தை திரைப்படமாக எடுக்க முடிவு செய்தேன்.
இவ்வாறு ஸ்பீல்பெர்க் கூறியுள்ளார்.
20த் சென்சுரி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் ‘பேபி டிரைவர்’ படத்தில் நடித்த ஆன்ஸெல் எல்கார்ட், ரேச்சல் ஜெக்லர், ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் வரும் டிசம்பர் மாதம் திரைக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.