கரோனா வைரஸ் அச்சத்தால் 'ப்ளாக் விடோ' படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பும், பீதியும் சர்வதேச அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில், பல்வேறு தொழில்துறைகள் பாதிப்பைச் சந்தித்துள்ளன. திரைத்துறையையும் கரோனா பாதிப்பு விட்டுவைக்கவில்லை.
மார்வல் மற்றும் டிஸ்னி நிறுவனங்களின் சூப்பர் ஹீரோ திரைப்படமான ’ப்ளாக் விடோ’ ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாகாது என்று தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’அவெஞ்சர்ஸ்’ சூப்பர் ஹீரோ குழுவில் முக்கிய பெண் கதாபாத்திரமான நடாஷா ரோமானாஃப் எப்படி 'ப்ளாக் விடோ' என்கிற சூப்பர் ஹீரோவாக உருவானார் என்பதே 'ப்ளாக் விடோ' படத்தின் கதை. 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படத்தில் இந்தக் கதாபாத்திரம் இறந்துவிடும் என்றாலும் இவரது ஆரம்பக் காலம், முன்கதை பற்றி ரசிகர்கள் பலருக்குத் தெரியாது. அதை மனதில் வைத்து மார்வல் இந்தத் திரைப்படத்தை எடுத்துள்ளது. மார்வல் படங்களின் ரசிகர்களும் இதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருந்தனர். தற்போது இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
ஏற்கெனவே 'முலன்', 'நியூ ம்யூடண்ட்ஸ்', 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9', 'எ கொயட் ப்ளேஸ் 2', 'பீட்டர் ரேபிட் 2', 'ஜேம்ஸ் பாண்ட் நோ டைம் டு டை' ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதிகள் கரோனா பாதிப்பால் தள்ளிப் போடப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.