ஹாலிவுட்

அவெஞ்சர்ஸ் நடிகருக்கு கோவிட்- 19 வைரஸ் காய்ச்சல் உறுதி

செய்திப்பிரிவு

தோர், அவெஞ்சர்ஸ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா தனக்கு கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் இருப்பதை உறுதி செய்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் - 19 வைரஸ் காய்ச்சல், தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, கோவிட் - 19 வைரஸை ‘உலகளாவிய நோய்த் தொற்று' என உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த வாரம் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தானும் தன்னுடைய மனைவியும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ‘குவாண்டம் ஆஃப் சொலாஸ்’, டாம் க்ரூஸ் நடித்த ‘ஒபிலிவியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஓல்கா குரிலென்கோ என்ற நடிகை தனக்கு கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தோர் மற்றும் அவெஞ்சர்ஸ் படங்களில் ஹெய்ம்டால் என்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா தனக்கு கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை ஒரு காணொளியாக அவர் வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் வந்திருப்பது இன்று காலை பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. நான் நன்றாக இருக்கிறேன். இதுவரை எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஆனாலும் நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். இது மிகவும் முக்கியமான பிரச்சினை. இது கைகளை நன்கு கழுவி, பாதுகாப்பாக இருப்பதற்கான நேரம். என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். மக்கள் எச்சரிக்கையாகவும், நடைமுறைக்கேற்றவாறும் இருக்க வேண்டும். நான் எப்படி இருக்கிறேன் என்பதை உங்களுக்கு தொடர்ந்து தெரிவிக்கிறேன். பயப்பட வேண்டாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT