ஹாலிவுட்

கரோனா பீதி எதிரொலி: வைரலாகும் ஹாலிவுட் திரைப்படம்

செய்திப்பிரிவு

2011-ம் ஆண்டு வெளியான 'கன்டேஜியன்' என்ற ஹாலிவுட் திரைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதற்குக் காரணம் கரோனா என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள்.

ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கத்தில் மரியான் கொடில்லார்ட், மேட் டேமன், க்வைனத் பால்ட்ரோ, ஜூட் லா, லாரன்ஸ் ஃபிஷ்பர்ன் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த திரைப்படம் 'கன்டேஜியன்'.

சீனாவில் மக்காவ் என்ற இடத்தில் இருக்கும் சமையல்காரர் ஒருவர், கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பன்றி மாமிசத்தைக் கையில் எடுத்துவிட்டு, தனது கையைக் கழுவாமல் க்வைனத் பால்ட்ரோ கதாபாத்திரத்துக்குக் கை கொடுப்பார். பால்ட்ரோ, அமெரிக்காவுக்குத் திரும்புகையில் அவருக்குக் கிருமித் தொற்று பாதிக்கப்பட்டிருக்கும்.

அடுத்த சில நாட்களில் அவர் இறக்க, அவரது தொற்று மற்றவர்களுக்கும் பெரிய அளவில் பரவ ஆரம்பித்து நாடே ஸ்தம்பிக்கும். இந்தக் கிருமித் தொற்று பன்றி, வவ்வாலிலிருந்துதான் ஆரம்பித்துள்ளது என்பார் படத்திலிருக்கும் விஞ்ஞானி ஒருவர்.

தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் கரோனா பீதி பற்றிக் கிட்டத்தட்ட அதேபோலவே பிரதிபலித்த காரணத்தால்தான் ’கன்டேஜியன்’ திரைப்படம் வைரலாகியுள்ளது. படத்தில் வருவதைப் போலவே இந்தக் கிருமியும் சீனாவிலிருந்துதான் பரவியுள்ளது. அதே போல ஒரு மாமிசத்திலிருந்துதான் ஆரம்பமானதாகக் கூறப்படுகிறது.

இப்போது பல நாடுகளில் இருப்பதைப் போலவே காலி வீதிகள், காலி விமான நிலையங்கள், நகரங்கள், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுக்கும் மக்கள் என பல விஷயங்கள் 'கன்டேஜியன்' படத்திலும் காட்டப்பட்டிருக்கும். இந்த ஒற்றுமைகள் குறித்து இயக்குநர் ஸ்டீவன் சோடர்பர்க் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

வெளியான நேரத்தில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்ற ’கன்டேஜியன்’, மருத்துவம் சார்ந்த விஷயங்களைத் துல்லியமாகச் சொன்னதாக, மருத்துவர்களிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றது. சமீபத்தில் இந்தப் படத்தின் கதாசிரியர் ஸ்காட் பர்ன்ஸ், ''கரோனா குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் அவரது நிர்வாகமும் இன்னும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து ஒழுங்காகச் செயல்பட ஆரம்பிக்கவில்லை'' என்று கடுமையாகச் சாடியிருந்தார்.

தற்போது ஐட்யூன்ஸ் தளத்தில் அதிகம் வாடகைக்கு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் ’கன்டேஜியன்’ உள்ளது. 2020-ம் ஆண்டு ஸ்ட்ரீமிங்கில் அதிகம் பார்க்கப்பட்ட வார்னர் ப்ரதர்ஸ் படங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT